×

ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடக்கம் கன்னியாகுமரியில் பாதுகாப்பு அதிகரிப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்தம், வியாபாரிகளுக்கு அடையாள அட்டை

கன்னியாகுமரி, நவ. 19: கன்னியாகுமரியில் சீசன் தொடங்கியுள்ளதையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி வருகின்றவர்களை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை பகுதிகளுக்கு படகு மூலம் பயணம் செய்து செல்வது,  சூரியன் உதயம் மற்றும் மறைவுகாட்சிகளை பார்வையிடுவது போன்றவை வெகுவாக ஈர்க்கின்றன.இந்த நிலையில் மண்டல கால பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டதையொட்டி, கன்னியாகுமரியில் நேற்றுமுன்தினம் (17ம் தேதி) முதல் ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளது. கன்னியாகுமரிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதுபோல சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இத்துடன் மாலை வேளைகளில் உள்ளூர் மக்களும் வருவதால் கன்னியாகுமரி களைகட்டி வருகிறது.

இந்த நிலையில் பேரூராட்சி சார்பில் கடற்கரையில் 8 கேமராக்கள் மற்றும் கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் இங்குள்ள வியாபாரிகள். தங்கும் விடுதிகள் நடத்துவோர் என பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரியில் கூட்டம் அலைமோதுவதால் திருட்டு உள்பட குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் தினமும் 200 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சிறு வியாபாரிகள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு கன்னியாகுமரி காவல் நிலையம் சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதை அணிந்து கொண்டுதான் அவர்கள் பணி மற்றும் வியாபாரம் செய்ய வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : Season Beginning Security Increase ,Kanyakumari ,
× RELATED கன்னியாகுமரி மக்களவை தேர்தல்-...