தொழிலதிபரிடம் ₹10 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

சென்னை, நவ.19: சென்னையை சேர்ந்த செல்வம் என்பவர், ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர், துபாயை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் நிறுவனத்துக்கு கடந்த 2009ம் ஆண்டு, ₹1.59 கோடிக்கு ஜவுளி ஏற்றுமதி செய்தார். அந்த நிறுவனமோ, அதற்கான ஒரு பகுதி பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, மீதி பணத்தை வழங்காமல் மறுத்து விட்டது.இதனால், அந்த நிறுவனம் மீது செல்வம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு, அப்போதைய மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ₹50 ஆயிரம் லஞ்சமாக வாங்கியுள்ளார்.அதன்பிறகு, ராமமூர்த்தியின் மனைவி கல்பனாவை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே வேளச்சேரியில் உள்ள கல்பனாவுக்கு சொந்தமான சொத்தை, புகார் கொடுத்த செல்வத்துக்கு கிரைய ஒப்பந்தம் செய்து கொடுத்து, பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர இருவரும் முடிவு செய்தனர்.இதற்காக, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் லஞ்சமாக ₹30 லட்சம் கொடுக்கும்படி செல்வத்திடம் கேட்டுள்ளார். வேறு வழியில்லாமல் செல்வம் ₹10 லட்சம் லஞ்சமாக கொடுத்துள்ளார். மீதி பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால், இன்ஸ்பெக்டர் அந்த இடத்தை கிரையம் செய்ய கூடாது என கல்பனாவை தடுத்துள்ளார்.

இதனால் செல்வம், அனைத்து ஆவணங்களுடன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் இதுகுறித்து புகார் செய்தார். கமிஷனர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் விசாரணை நடத்தினார். விசாரணையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓம்பிரகாஷ் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ₹2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories:

>