×

செங்கல்பட்டு புதிய மாவட்டம் உதயம் கட்டமைப்பு பணிகளுக்கு ₹14 கோடி

செங்கல்பட்டு, நவ. 19: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் கட்டமைப்பு பணிக்கு ₹14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு புதிய மாவட்டம் வரும் 29ம் தேதி உதயமாகிறது. இந்த விழா செங்கல்பட்டு அரசு ஐடிஐ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.இதையொட்டி தற்காலிக கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, கம்ப்யூட்டர், பணியாளர் சம்பளம், வாகனங்கள் உள்ளிட்டவைகளுக்கு ₹12 கோடியே 93 லட்சத்து 54 ஆயிரத்து 486 ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் நேரடி, மறைமுக பணியாளர் நியமனத்துக்காக ₹2 கோடியே 25 லட்சத்து 6 ஆயிரத்து 188 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக பணிகளை மேற்கொள்ள 167 மாவட்ட அலுவலர்கள் நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில், மாவட்ட திட்ட இயக்குனர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), துணை ஆட்சியர், தாசில்தார், துணை தாசில்தார், தேர்தல் பிரிவு அலுவலர்கள், பொதுப்பணித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மீன்வளத் துறை ஆகிய துறை அலுவலர்கள் அடங்குவர். மேலும், புதிய வாகனம், கம்ப்யூட்டர்கள், பெட்ரோல், டீசல், மரச் சாமான்கள், மேஜை, நாற்காலி, சம்பளம் உள்ளிட்டவை அடங்கும்.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வண்டலூர் தாலுகாவுக்கு 41 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பெரும்புதூர் ஆர்டிஓ அலுவலகத்துக்கு 12 பணியிடங்களும், குன்றத்தூர் தாலுகாவுக்கு 51 பணியிடங்களும் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.  எஸ்பி அலுவலகத்துக்கான இடம் இன்னும் தேர்வு செய்யவில்லை.இதனால், செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், நேற்று காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்திலேயே  பொறுப்பேற்று கொண்டார். இடம் தேர்வு செய்யும் வரை அங்கிருந்தே செங்கல்பட்டு மாவட்ட பொறுப்புக்களை கவனிப்பார். அதற்காக காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்திலேயே அவருக்கு தனியறை ஒதுக்கப்பட்டுள்ளது.



Tags : Chengalpattu ,district ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!