×

யானைகவுனி மேம்பால சீரமைப்பு பணி தொடங்கியது கடும் நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள்: விரைந்து முடிக்க கோரிக்கை

தண்டையார்பேட்டை: சென்னை வால்டாக்ஸ் சாலை மற்றும் ராஜா முத்தையா சாலையை இணைக்கும் வகையில் யானைகவுனி மேம்பாலம் அமைந்துள்ளது. ரயில்வே துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த  பாலத்தின் இருபுறமும் உள்ள சர்வீஸ்  சாலைகள் மட்டும் மாநகராட்சி பராமரிப்பில் உள்ளது.பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலம், தற்போது பழுதடைந்துள்ளதால் இவ்வழியே கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, மாற்றுப் பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இருசக்கர  வாகனங்கள் மட்டுமே பாலத்தின் மீது செல்ல அனுமதி வழங்கப்பட்டது.தொடர்ந்து, இந்த பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. மேலும், பாலத்தின் கீழ் கூடுதல் ரயில் பாதை அமைய உள்ளதால், அதை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள 50மீ நீளமுள்ள ரயில்வே மேம்பாலத்தை  இடித்துவிட்டு, 100 மீட்டரில் புதிய பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து நிதி பங்களிப்பில் இந்த பாலம் அமைக்கப்பட உள்ளது.ரயில்வே பகுதி பாலப் பணிக்கான பொது சீரமைப்பு வரைபடத்தை ரயில்வே துறை சென்னை மாநகராட்சியிடம் சமர்ப்பித்தது. அந்த வரைபடத்திற்கு சென்னை மாநகராட்சி 28.02.2018 அன்று ஒப்புதல் அளித்தது. பின்னர், மாநகராட்சி கட்டுப்பாட்டில்  உள்ள பாலத்தின் சர்வீஸ் சாலையை சீரமைக்க வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஆனாலும், பாலப்பணி தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டது.

நீண்ட இழுபறிக்கு பிறகு, கடந்த 2 நாட்களுக்கு முன் யானைகவுனி புதிய மேம்பால பணி தொடங்கியது. இதற்காக, அவ்வழியே இருசக்கர வாகன போக்குவரத்தையும் தடை செய்து, பழைய மேம்பாலத்தை இடிக்கும் பணி தொடங்கி உள்ளது. தற்போது, மாற்றுப்பாதையில் இயக்கப்படும் வாகனங்கள் மூலக்கொத்தலம் வழியாக செல்வதால் காலை, மாலை நேரங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் கடும் அவதிப்படுகின்றனர். பொன்னேரி,  அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழியாக ராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனை, சென்ட்ரல் அரசு பொது மருத்துவமனைக்கு வருவோரும் நெரிசலில் சிக்கி சிரமப்படுகின்றனர். இவ்வழியாக, 10 நிமிடத்திற்கு 2 ஆம்புலன்ஸ்கள் செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாக, காலதாமதம் ஏற்பட்டு, நோயாளிகளின் உயிருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக தினந்தோறும் மூலகொத்தலம் பாலத்திலிருந்து தங்கசாலை, ஸ்டான்லி மருத்துவமனை, பாரதி கல்லூரி வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதேபோல் மூலக்கொத்தலம் பாலத்திலிருந்து  வியாசர்பாடி பாலம், சத்தியமூர்த்தி நகர் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.  மூலக்கொத்தளம் பாலத்திலிருந்து புளியந்தோப்பு வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றது.  இதனால், காலை மாலை நேரங்களில் வடசென்னை மக்கள்  கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, புதிய பாலப்பணியை விரைந்து முடிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...