×

பாபர் மசூதி தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: பாபர் மசூதி வழக்கு தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு நேற்று நடந்தது. மாநில தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமை வகித்தார். பொதுச்  செயலாளர் முஹம்மது, மாநில பொருளார் அப்துல் ரஹீம், துணை பொது செயலாளர் அப்துல் கரீம், மாநில செயலாளர்கள் சித்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது, மாநில தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி பேசுகையில், ‘‘பாபர் மசூதி வழக்கில் நீதி கிடைக்கும்  என்ற நம்பிக்கையில் இருந்த இஸ்லாமியர்களுக்கு இந்தத் தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஆதாரங்களின் அடிப்படையில் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பை அளிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அதிகமான மக்கள்  நம்புகின்றார்கள் என்று கூறி சட்டத்தையும், நீதியையும் புறந்தள்ளி நம்பிக்கையை மையமாக வைத்து இந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இஸ்லாமிய சமுதாயம் மட்டுமின்றி நல்லிணக்கத்தை விரும்பும் நடுநிலை மக்கள் கூட இந்தத் தீர்ப்பு தவறு என்று விமர்சித்து வருகின்றார்கள். பல அரசியல் கட்சித் தலைவர்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பினை தவறு என்று விமர்சித்துள்ளார்கள். இந்தத் தீர்ப்பை எந்த நிலையிலும் மக்கள் ஏற்கவில்லை என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்   உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது” என்றார்.


Tags : Demonstration ,participants ,Babri Masjid ,
× RELATED நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்