×

எஸ்சி, எஸ்டி பணியாளர்களுக்கு 15 மண்டலங்களில் குறைதீர் மையம் : ஆணைய துணை தலைவர் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் எஸ்சி, எஸ்டி பணியாளர்களின் குறைகளுக்கு தீர்வு காண 15 மண்டலங்களிலும் தீர்வு மையம் அமைக்க வேண்டும் என்று தேசிய எஸ்சி ஆணைய துணை தலைவர் முருகன்  உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள்  எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச்  சேர்ந்தவர்கள். இவர்களின் நலனுக்காக  மத்திய,  மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கான குறைதீர்வு கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடந்தது. தேசிய தாழ்த்தப்பட்டவர்கள் ஆணைய துணை  தலைவர் முருகன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இணை ஆணையர் லலிதா, துணை ஆணையர்கள் குமரவேல் பாண்டியன், மதுசூதன் ரெட்டி, காவல் இணை ஆணையர் விஜயகுமாரி, மாநகராட்சி முதன்மை தலைமை பொறியாளர், தலைமை  பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், துறை தலைவர்கள், மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள், மாநகராட்சி பணியாளர்கள் ஆகியோர் தங்களின் குறைகளை தெரிவித்தனர். இதன்படி அவுட் சோர்ஸ் பணியாளர்களுக்கு சரியான தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு முறையாக  மருத்துவ முகாம் நடத்த வேண்டும், தாட்கோ மூலம் உரிய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பணி நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை தெரிவித்தனர். இதை பதிவு செய்து கொண்ட துணை தலைவர் முருகன் பணியாளர்களின் கோரிக்கை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் இதுதொடர்பாக மாதந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டார்.

தொடர்ந்து, ஆணைய துணை தலைவர் முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் எஸ்சி, எஸ்டி பணியாளர்களுக்கான குறைதீர்வு மையம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த மையம் சீரான இடைவெளியில் பணியாளர்களின் குறைகளுக்கு  தீர்வு காண வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவில் காலியாக உள்ள 33 காலியிடங்களை 2 மாதத்திற்குள் நிரப்ப வேண்டும் என்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கழிவுநீர்  தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதை ஒரு சமூக குற்றமாக கருதி அவர்களுக்கான தண்டனையை அதிகப்படுத்த சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்  என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : SC ,zones ,Govt ,
× RELATED எஸ்சி,எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகையை முடக்கினால் போராட்டம்