×

நடைபாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சிறு கோயில்களை அகற்றும் பணி தீவிரம்: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: நடைபாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கோயில்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 387.35 கி.மீ நீள பேருந்து வழிதட சாலைகள் உள்ளன. இதை தவிர்த்து 5,623 கி.மீ நீள உட்புற சாலைகள்  உள்ளன. இந்நிலையில், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பேருந்து தட சாலைகளில்  பாதசாரிகள்  நடந்து செல்வதற்கு ஏதுவாக நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 26 பேருந்து வழித்தட சாலைகளில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக 46 சாலைகளில் நடைபாதைகள்  அமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து 2018-19ம் ஆண்டு நிதியாண்டில் 74 கிலோ மீட்டர் நீளமுடைய சாலைகளில் ₹46 கோடி மதிப்பீட்டில் 31 நடைபாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டியில் 96 கிலோ மீட்டர்  பேருந்து வழித்தட  சாலைகளை மேம்படுத்தவும், நடைபாதைகள் அமைக்கவும் ₹76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள நடைபாதைகளை பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பாதாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதைப்போன்று நடைபாதைகளில் சிறு கோயில்களும்  அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்வதுடன், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நடைபாதைகளில் உள்ள கோயில்களை அகற்றும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு  வருகிறது. அதன்படி, கோடம்பாக்கம் மண்டலத்தில் அண்ணா மெயின் சாலையில் உள்ள கோயில்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதேப்போன்று உரிய அனுமதி இல்லாமல் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கோயில்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளர். மேலும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என்று ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

Tags : temples ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு