×

இறந்த தாய் குரங்கை கட்டிப்பிடித்து அழுத குட்டி குரங்கின் பாசப்போராட்டம்

சென்னிமலை. நவ.14: சென்னிமலையில் இறந்த தாய் குரங்கை குட்டி குரங்கு கட்டியணைத்து கண்ணீர்விட்டு அழுத  பாசப்போராட்டம் பொதுமக்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள மலைகோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயில் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள், தாங்கள் வைத்திருக்கும் பழம் மற்றும் தேங்காய் பொருட்களை கொடுப்பதால், ருசிகண்ட குரங்குகள் சென்னிமலை நகரத்துக்குள் படை எடுக்கத் துவங்கியது. நகரிலுள்ள கடைக்குள் புகுந்து, தொங்கவிடப்பட்டிருக்கும் வாழைப்பழங்களையும், பொருட்களையும் தூக்கிவீசி அட்டகாசம் செய்து வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சென்னிமலையில் ரோட்டில் குட்டியுடன் நின்று கொண்டிருந்த தாய் குரங்கு, ரோட்டை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற வாகனம் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட தாய் குரங்கு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராடியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், ஓடிச்சென்று அடிபட்ட குரங்குக்கு தண்ணீர் கொடுத்தனர். ஆனால், சிறிது நேரத்தில் அந்த குரங்கு பரிதாபமாக இறந்தது. இதனால், குட்டி குரங்கு கண்ணீர் விட்டு அழுதது.மேலும், தாய் குரங்கை கட்டிப் பிடித்தபடியே நகராமல் அங்கேயே இருந்தது. அதன் பிறகு வனத்துறையினர் குட்டி குரங்கை பிடித்துச்சென்று வனப்பகுதியில் விடுவித்தனர். இந்த சம்பவம், அங்கு கூடியிருந்த பொதுமக்களையும் கண்கலங்கச் செய்தது.


Tags :
× RELATED குரங்குகளுக்கு உணவு வழங்கும் திருவிழா : தாய்லாந்தில் வினோதம்!!