×

திருவாரூர் அரசு மருத்துவமனையில் அடைத்து வைத்துள்ள பாதை திறக்கப்படுமா?

திருவாரூர், நவ.14: திருவாரூர் கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இதில் தினந்தோறும் வெளி நோயாளிகளாக சுமார் ஆயித்து500 பேர்கள் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுமட்டுமன்றி உள்நோயாளிகளாக திருவாரூர் மற்றும் நாகை மாவட்டம் என 2 மாவட்டங்களையும் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் அவர்களது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என நாள் ஒன்றுக்கு சுமார் 10 ஆயிரம் பேர் வரை இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த மருத்துவ கல்லூரிக்கு செல்வதற்கு கலெக்டர் அலுவலகத்தின் வலது புறத்திலிருந்து ஒரு சாலையும், இடது புறத்தில் இருந்து ஒரு சாலையும் இருந்து வந்தநிலையில், ஏதோ காரணம் காட்டி அதில் இடது புற சாலையானது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அப்போது மருத்துவமனை டீனாக இருந்த மீனாட்சிசுந்தரம் என்பவர் மூலம் இரவோடு இரவாக திடீரென மதில் சுவர் வைத்து அடைக்கப்பட்டது. இதன் காரணமாக கொரடாச்சேரி, அம்மையப்பன் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வாகனங்களும் வலது புறத்தில் இருந்துவரும் சாலையை பயன்படுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.

மேலும் இந்த சாலையினை கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், நீதிமன்றம் உட்பட பல்வேறு அலுவலகங்களுக்கு செல்லும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருவதற்கு அரசுப் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே இந்த சாலையானது மிகவும் குறுகிய சாலையாக இருந்து வருவதால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இது மட்டுமின்றி கொரடாச்சேரி மற்றும் அம்மையப்பன் பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் காரணமாக காயமடைந்தவர்களை உடனே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு நீண்ட நேரம் ஆகும் நிலை இருந்து வருகிறது. எனவே நோயாளிகள் மற்றும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி இடதுபுறத்தில் அடைக்கப்பட்டுள்ள பாதையினை முன்பு இருந்தவாறு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் ஆம்புலன்ஸ்கள் சென்று வரும் வகையில் திறந்து விட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : government hospital ,Thiruvarur ,
× RELATED முற்றுகை போராட்டம்