×

பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும்

கடலூர், நவ. 14:  அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை நியாய விலை கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும், என சங்க மாநில சிறப்பு தலைவர் தெரிவித்தார். நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையாக ரேஷன் கடை ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ரேஷன் கடையை தனித்துறையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.சரியான எடையில் பொருட்களை ரேஷன் கடைகளுக்கு பொட்டலங்களாக வழங்க வேண்டும். பயோமெட்ரிக் ரேஷன் கார்டுகள் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். ரேஷன் கார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப கடைகளுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் கடையடைப்பு காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ரேஷன் கடை ஊழியர்களின் போராட்டம் காரணமாக கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொது விநியோகத் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்கள் கடலூர் நுகர்பொருள் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதியில் உள்ள கிடங்குகளில் இருந்து கொண்டு சென்று ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடலூர் பழைய ஆட்சியர் அலுவலம் முன், நேற்று மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், ரேஷன் கடை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் தற்போது சங்க நிர்வாகிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை நியாய விலை கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும். மேலும் நாளை (இன்று) 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆட்சியர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம், என்றார்.இதை தொடர்ந்து ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ரேஷன் கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Tags : strike ,talks ,
× RELATED சிவகாசி அருகே சாலை அமைக்க கோரி மக்கள் மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை