×

அண்ணாமலை பல்கலையில் தொற்றுநோய் பயிலரங்கம்

சிதம்பரம், நவ. 14: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருந்தாக்கியல் துறையில் தொற்று நோய் பற்றிய சர்வதேச பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில் சமீபகால தொற்று நோய்கள் பற்றிய கண்டுபிடிப்புகளும், இந்தியா மற்றும் உலக நாடுகளின் பல்வேறு விதமான தொற்று நோய்களின் தாக்கம் பற்றியும் விவாதிக்கப்பட்டது. பயிலரங்கத்தில் இங்கிலாந்தில் உள்ள ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆராய்ச்சி செய்பவரும், பேராசிரியருமான டாக்டர் பீட்டர் மோங்க் கலந்துகொண்டு மருத்துவ முக்கியத்துவம் குறித்தும், அதை கொண்டு திசுவில் உள்ள பாக்டீரியாவை எப்படி அழிக்க முடியும் என்று விளக்கினார். அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவ கல்லூரி புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேந்திரன் நோய் தொற்றினால் ஏற்படும் புற்று நோய்கள், குறிப்பாக பாப்பிலோமா வைரஸ் மூலமாக ஏற்படும் கர்ப்பபை வாய் புற்றுநோய் மற்றும் ஹெலிகோ பேக்டர் பைரோலி என்ற  பாக்டீரியாவால் ஏற்படும் வயிறு புற்றுநோய் பற்றியும், அதனை கண்டறியும் முறை மற்றும் அதனை எப்படி தவிர்ப்பது என விவாதித்தார்.

நுண்ணுயிரியல் பேராசிரியை டாக்டர் ஜெயா தொற்று நோய்கள் பற்றியும், அதன் வீரியத் தன்மை, தொற்று நோயான காசநோயை எப்படி இந்தியாவில் இருந்து பூரணமாக ஒழிக்க முடியும் என்பது பற்றி விளக்கினார். மருந்தாக்கியல் துறைத்
தலைவரும் மற்றும் பேராசிரியருமான மொகந்தா ஆண்டிபயாட்டிக் மருந்தை பயன்படுத்தும் முறை பற்றி விளக்கினார்.பயிலரங்கத்தில் வெவ்வேறு துறையை சார்ந்த சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இப்பயிலரங்கத்தை அண்ணாமலைப் பல்
கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய வழி முறை, பல்வேறு ஆய்வகங்கள் ஆராய்ச்சியாளர்களின் பங்கு பற்றி விளக்கினார். பல்கலைக்கழக பதிவாளர்(பொ) கிருஷ்ண மோகன் புதிய கண்டுபிடிப்புகளில் விஞ்ஞானிகளின் பங்கு என்ன என்பது பற்றி விளக்கினார். பொறியியல் துறை புல முதல்வர் ரகுகாந்தன் புதிய ஆராய்ச்சியில் மாணவர்களின் பங்கு பற்றி விளக்கினார். தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பார்த்தசாரதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை மற்ற ஒருங்கிணைப்பாளர்கள் சரவணகுமார், சனில்குமார்,  சரவணன் மற்றும் பாலசந்திரன் ஆகியோர் செய்தனர்.

Tags : Annamalai University ,
× RELATED சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணையவழித் தேர்வு முடிவுகள் வெளியீடு..!!