ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தல்

விருத்தாசலம், நவ. 14: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள க.இளமங்கலம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் கல்வி நலனுக்காக விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதுமான கழிவறை வசதி இல்லாததால் அருகில் உள்ள ஏரிக்கரை பகுதிக்கு செல்கின்றனர். மேலும் விருத்தாசலம்-தீவளூர் நெடுஞ்சாலையை கடந்து ஏரிக்கரைக்கு பள்ளி சிறுவர்கள் செல்கின்றனர்.

இதனால், சாலைகளை கடக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் ஏரிக்கரையில் தடுப்பு சுவர்கள் எதுவுமின்றி பாதுகாப்பற்ற முறையில் உள்ளதால் ஏரியில் உள்ள நீரில் மாணவர்கள் தவறி விழும் அபாயம் உள்ளது.
மாணவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் என்ற சூழலில் மாணவர்களின் பெற்றோர்கள் கவலையில் உள்ளனர். மேலும் பள்ளியில் கழிவறை வசதியை மேம்படுத்தி தர வேண்டுமெனவும், இதுபோன்ற ஆபத்தை விளைவிக்க
கூடிய நிலையில் உள்ள ஏரியில் தடுப்பு சுவர் அமைக்க கோரி பலமுறை அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை நிர்வாகத்திற்கு மனு அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Toilet Facilities ,Panchayat Union Elementary School ,
× RELATED ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா