×

ராமநத்தம் பகுதியில் பருத்திச்செடிகளை சேதப்படுத்தும் குரங்குகள்

திட்டக்குடி, நவ. 14: ராமநத்தம் பகுதியில் குரங்கு தொல்லையால் பருத்தி பயிர்கள் சேதமடைந்துள்ளன என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட ராமநத்தம் ஆலத்தூர், கீழகல்பூண்டி, வடகரா பூண்டி, சித்தூர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம், பருத்தி ஆகியவற்றை பயிர் செய்து வருகின்றனர். சென்றாண்டு அதிக அளவில் சோளம் பயிர் செய்யப்பட்ட நிலையில் மான்கள், மயில்கள் போன்றவற்றால் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டதால். இந்த ஆண்டு விவசாயிகள் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.இந்நிலையில் ஆலத்தூர் பகுதியில் தற்போது குரங்குகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாலும் அவை விவசாயிகளின் பருத்தி சாகுபடி செய்துள்ள விளைநிலங்களுக்கு சென்று அங்குள்ள பருத்தி காய்களை சாப்பிடுவதாலும், செடிகளை அழித்து விடுவதாலும் அதிக அளவில் நஷ்டம் ஏற்படுகிறது.

இது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குரங்குகளை துரத்துவதற்காக ஒருவிதமான வெடிச்சத்தம் ஏற்படுத்தும் கருவியை தயார் செய்து அதன் மூலமாக குரங்குகளை துரத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்திலும் பரவி வருகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, சோளப்பயிர்கள் மட்டுமல்ல, பருத்தி செடியில் உள்ள பருத்திக்காயைக்கூட இந்த குரங்குகள் விடுவதில்லை. நாள் முழுக்க மற்ற வேலை எல்லாம் விட்டுவிட்டு நாள் முழுக்க பசி பட்டினியோடு காவல் காத்திருக்கிறோம். இது சம்பந்தமாக தமிழக அரசு மற்றும் வனத்துறையினர் உடனடியாக குரங்குகளை பிடித்து அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டுவிட வேண்டும் என கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Tags : cotton plants ,Ramanatham ,area ,
× RELATED வாட்டி வதைக்கும்...