×

₹6.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது மணப்பாக்கத்தில் ஓராண்டாக மூடிக்கிடக்கும் அங்கன்வாடி மையம்

பண்ருட்டி, நவ. 14: பண்ருட்டி அருகே மணப்பாக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். மையத்தின் அருகில் வயல்வெளி உள்ளதால் அங்கிருந்து வெளியேறும் மழைநீர் அங்கன்வாடி மையத்தின் உள்ளே புகுந்து விடுகிறது. மேலும் விஷ ஜந்துக்களும் மையத்தின் உள்ளே வலம் வருவது வாடிக்கையாகி வருகிறது. மேலும் பழைய கட்டிடம் என்பதால் இடிந்து விழும் நிலை உள்ளது.இதனால் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்தனர். அதன்பேரில் கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் ரூ.6.5 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் புதிய கட்டிடம் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கிறது.

பழைய அங்கன்வாடி கட்டிடம் இடியும் நிலையில் உள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு புதிய அங்கன்வாடி மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Anganwadi Center ,Manappakam ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்