×

ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு தாலுகா அறிவிக்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம்

ரிஷிவந்தியம், நவ. 14: புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சியில் எந்தெந்த தாலுகாக்களை இணைப்பது என கடந்த சில மாதங்களாக குழப்பம் நீடித்து வந்தது. இதனால் சில அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பொதுமக்கள் அவரவர் வசதிக்கேற்ப இணைக்க கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் நேற்று தமிழக அரசு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இணைக்கப்பட்ட தாலுகாக்கள் குறித்து அரசாணை வெளியிட்டது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் என 2 வருவாய் கோட்டமும்,விழுப்புரம், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், வானூர், மரக்காணம் மற்றும் புதியதாக திருவெண்ணெய்நல்லூர் ஆகிய தாலுகாக்களை இணைத்துள்ளனர். அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் என 2 வருவாய்  கோட்டமும், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் புதியதாக கல்வராயன்மலை ஆகிய தாலுகாக்களை இணைத்துள்ளனர்.

சங்கராபுரம் தாலுகாவின் மக்கள் தொகை 37 லட்சத்து 6460 ஆகும். இங்கு 11 லட்சத்து 876 குடும்ப அட்டைகள் உள்ளன. சங்கராபுரம் வட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 53 கிராம ஊராட்சிகள் உள்பட 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் முழுக்க முழுக்க விவசாய தொழில் பிரதானமாக உள்ளது. இதில் காப்பு காடுகள் அதிக அளவில் உள்ளன. இங்கு மிக பழமை வாய்ந்த ரிஷிவந்தியம் அர்த்தநாதீஸ்வரர் ஆலயமும், ஆதி திருவரங்கத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரங்கநாத பெருமாள் ஆலயமும் உள்ளன.ரிஷிவந்தியம் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் வருவாய் சார்ந்த முதியோர் உதவித் தொகை, பட்டா மாற்றம், நில அளவை, ஜாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ்கள், குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள, புதிய குடும்ப அட்டை பெற, கல்வி உதவித்தொகை, திருமணம் உதவி பெற, ஆதார் புகைப்படம் எடுக்க, பிறப்பு மற்றும் இறப்பு சான்று பெற மற்றும் பல்வேறு வருவாய் சார்ந்த சான்றுகள் பெற சங்கராபுரத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது.

சங்கராபுரம் வட்டத்தில் கடைசி கிராமமான பிரிவிடையாம்பட்டு, மண்டகப்பாடி, வெங்கலம், முட்டியம், பாசார், அரியந்தக்கா உள்ளிட்ட கிராம மக்கள் தியாகதுருகம் - கள்ளக்குறிச்சி வழியாக சங்கராபுரம் செல்ல வேண்டும். அதேபோல் கள்ளிப்பாடி, திருவரங்கம், ஜம்படை, கரையாம்பாளையம், எடுத்தனூர், சீர்பனந்தல்  உள்ளிட்ட கிராம மக்கள் பகண்டை கூட்டு சாலை வழியாக சங்கராபுரம் செல்ல வேண்டும். இதனால் கால நேரமும், பண விரயமும் ஏற்
படுகிறது. போதிய பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இதனால் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு தாலுகாவாக அரசு அறிவிக்காததால் அப்பகுதி மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.இதுகுறித்து ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்தி
கேயன் கூறியதாவது:

தமிழக அரசு சங்கராபுரம் வட்டத்திலுள்ள கல்வராயன்மலையை தனி தாலுகாவாக அறிவித்துள்ளது. ஆனால் ரிஷிவந்தியம் பகுதி மக்கள் சங்கராபுரம் செல்ல தியாகதுருகம் வழியாக சுமார் 50 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. அப்பகுதி மக்களின் சிரமத்தை போக்க ரிஷிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகாவாக அமைக்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. ரிஷிவந்தியம் அருகில் உள்ள மக்கள் 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருக்கோவிலூர் தாலுகா வருகிறது. இதை திருத்தி அரசு அமைக்க வேண்டும் என நினைத்திருந்தால் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டு திருக்கோவிலூர் தாலுகாவில் உள்ள 20 கிராமங்களையும், சங்கராபுரம் தாலுகாவில் உள்ள 25 கிராமங்களையும், தியாகதுருகம் பகுதியில் 15 கிராமங்களையும் இணைத்து புதிய தாலுகா அமைத்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் இவ்வாறு அரசு அறிவிக்காதது உண்மையிலேயே இப்பகுதி மக்களை வஞ்சித்துள்ளது. இதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : public ,headquarters ,taluk ,Rishiwandiam ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...