×

வேலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் நடவு: கடந்த ஆண்டைவிட 200 ஏக்கர் குறைவு

வேலூர், நவ.14: வேலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 200 ஏக்கர் குறைவு என்று வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் நம்பியிருந்த கிணற்று பாசனமும் நிலத்தடி நீர்ட்டம் குறைந்ததால் சிறுதானியங்கள், எண்ணெய் வித்து பயிர்களில் விவசாயிகள் தங்கள் கவனத்தை திருப்பியிருந்தனர். இந்நிலையில், கடந்தாண்டு வேலூர் மாவட்டத்தில் சராசரி மழையளவு வழக்கத்தை விட குறைவாக பதிவானது. இதனால் கோடைகாலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. அதோடு, மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் கேட்டு சாலை மறியல், அரசு அலுவலகங்கள் முற்றுகை என போராட்டங்களும் நடந்தன. இதனால் மாவட்டத்தில் உள்ள கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் பயரிட்டு வந்தனர். கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் மட்டும் 27 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் நடவு செய்யப்பட்டது. அதேபோல், சிறு தானியங்கள், பயறு வகைகள், பருத்தி, கரும்பு என மொத்தம் 45 ஆயிரத்து 625 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடந்தது.

ஆனால், இந்தாண்டு தென்மேற்கு பருவ மழையும் எதிர்பார்த்த அளவை விட கூடுதலாகவே மழை பெய்தது. ஆனால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளால் மழைநீர் வீணானதுதான் மிச்சம். தற்போது வரை வேலூர் மாவட்டத்தில் 184 ஏரிகளில் ஒரு சொட்டு நீர் கூட இல்லையென்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் தண்ணீரும் குறைவாக உள்ளதால் விவசாயிகள் சம்பா பருவத்திற்கான நெல் பயிரிடுவதை குறைத்துள்ளனர். மேலும் சிறுதானியங்களுக்கு பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தாண்டு 27 ஆயிரத்து 307 ஏக்கர் மட்டும் நெல் பயிரிட்டுள்ளனர். இது கடந்தாண்டை விட 200 ஏக்கர் குறைவாக நெல் பயிரிட்டு உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு நடப்பு பருவத்தில் 27 ஆயிரத்து 307 ஏக்கர் பரப்பளவில் நெல், 10 ஆயிரத்து 27 ஏக்கரில் சிறு தானியங்கள், 21 ஆயிரத்து 400 ஏக்கரில் பயறு வகைகள், 4 ஆயிரத்து 300 ஏக்கரில் கரும்பு, 11 ஆயிரத்து 671 ஏக்கரில் பருத்தி உட்பட குறுகியகால பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 200 ஏக்கர் குறைவு என்றும் வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vellore District ,Samba ,
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...