×

கள்ளச்சாராயம், மது விற்ற 9 பேர் கைது

வாழப்பாடி. நவ.14: வாழப்பாடி மற்றும் கெங்கவல்லி பகுதியில் கள்ளச்சாராயம், மது விற்ற பெண்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வாழப்பாடி அடுத்த பேளூர் தனியார் பள்ளி அருகே, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கருமந்துறையில் இருந்து வாழப்பாடி நோக்கி டூவீலரில் வந்த வாலிபரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். இதில், அவர் வாழப்பாடி அருகே சேசன்சாவடி பகுதியைச் சேர்ந்த தமிழரசன்(32) என்பதும், அனுமதியின்றி மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, அவரை போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், குறிச்சி அருகே நடத்திய சேதனையில் மது பாட்டில் கடத்தியதாக பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்(44), பிரபு( 34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.

 வாழப்பாடி அருகே கருமந்துறையில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக எஸ்.பி. தீபா கனிகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், வாழப்பாடி டிஎஸ்பி சூரியமூர்த்தி தலைமையில் கருமந்துறை போலீசார் ரோந்து பணியை முடுக்கி விட்டனர். இதில், மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்றதாக கல்லுப்பட்டு பகுதியைச் சேர்ந்த பழனி(40), ஆண்டி(56)  மற்றும் தொட்டிதுறையைச் சேர்ந்த சித்தன்(60) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15 லிட்டர் சாராயம் கைப்பற்றி அழிக்கப்பட்டது. கெங்கவல்லி: கெங்கவல்லி சுற்றியுள்ள கிராமங்களில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக எஸ்பி தீபா கனிக்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், ஆத்தூர் டிஎஸ்பி ராஜூ தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். கெங்கவல்லி, கூடமலை, 74-கிருஷ்ணாபுரம், ஒதியத்தூர், ஆணையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கூடமலை பகுதியில்  சாராயம் விற்பனை செய்த கொடைமலை மூக்கையன்(52), பானுமதி(60) மற்றும் மலர்(50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 16 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்