×

கூடுதல் கட்டணம் வசூலிக்க வற்புறுத்துவதால் சிவகாசியில் மூடிக் கிடக்கும் சுகாதார வளாகங்கள்

சிவகாசி, நவ. 14: சிவகாசியில் மகளிர் அமைப்பினர் பராமரித்து வரும் சுகதார வளாகங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க வலியுறுத்துவதால், அவைகள் மூடிக் கிடக்கின்றன. இதனால், சுகாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது. சிவகாசி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் மூலம் அனைத்து வார்டுகளிலும் நவீன சுகாதார வளாகங்கள் கட்டுவதற்காக, அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் மூலம் நகரில் ரூ.5 லட்சத்தில் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. இந்த கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பறைகளை பராமரிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மகளிர் அமைப்பினரிடம் வழங்கியுள்ளது. நகராட்சி நிர்வாகம் கழிப்பறை கட்டணமாக ரூ.2 மட்டுமே வசூலிக்க அறிவுறுத்தியுள்ளது. ஆனால், முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் கழிப்பறை பராமரிப்பாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து தங்களுக்கு ஒரு தொகையை தரவேண்டும் என கேட்பதாக கூறப்படுகிறது. இதனால், நகரில் உள்ள பெம்பாலான கழிப்பறைகளில் ரூ.5 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், கட்டணம் கொடுத்து கழிப்பறை செல்லாமல் திறந்த வெளிக்கு செல்கின்றனர். இதனால், நகராட்சியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தையும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நகரில் காளியம்மன்கோவில் தெருவில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறை கடந்த 5 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கிறது. இதைச் சுற்றிலும் திறந்த வெளியாக இருப்பதால் பெண்கள் கழிப்பிடம் செல்ல தயங்குகின்றனர். இங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் கழிப்பறையை பயன்படுத்த பெண்கள் முன்வரவில்லை. இந்த பகுதியில் வாறுகாலில் இயற்கை உபாதைகளை கழிப்பதால், குடியிருப்பு பகுதி முழுவதும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால், தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளது. இதேபோல, சிவகாசி விஸ்வநத்தம் சாலை தெற்கு தெரு பகுதியில் துாய்மை இந்தியா திட்டம் மூலம் ரூ.5 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக செயல்படாமல் பூட்டிக் கிடக்கிறது. இங்கு அதிக கட்டணம் வசூலிக்க கோரி கழிப்பறை பராமரிப்பாளர்களிடம் அரசியல் பிரமுகர் வற்புறுத்துவதால் சுகாதார வளாகம் பூட்டிக் கிடக்கிறது. இதனால், இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். வாறுகாலில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் கடுமையான சுகாதாரக்கேடு நிலவி வருகிறது.

இதேபோல விஸ்வநத்தம் சாலையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்டு செயல்பட்டு வந்த கழிப்பறை தற்போது செயல்படாமல் மூடிக்கிடக்கிறது. இந்த பகுதியில் பள்ளி மைதானம் அமைந்துள்ளது. கழிப்பிட வசதி இல்லாததால் பள்ளி மைதானத்தை கழிப்பிடமாக பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால், பள்ளி வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, அரசு நிதி வீணாவதை தடுத்து, கழிப்பறைகளை முறையாக செயல்படுத்திட வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சிவகாசி காளியம்மன் கோவில் தெரு மூர்த்தி கூறுகையில், காளியம்மன் கோவில் தெருவில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் பெண்கள் கழிப்றையை பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். திறந்தவெளியை பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. விஸ்வநத்தம் ரோடு தெற்கு தெருவில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த அதிக கட்டணம் வசூலிக்க கோரி அரசியல் பிரமுகர்கள் கட்டாய படுத்தி வருவதால் செயல்படாமல் கிடக்கிறது.
நகராட்சி அதிகாரிகள் கழிப்பறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Sivakasi ,
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...