×

மூணாறில் உள்ள லாக்காடு கேப் சாலையை திறக்கக்கோரி மறியல்

மூணாறு, நவ.14: மூணாறில் உள்ள லாக்காடு கேப் சாலையை திறக்க வலியுறுத்தி தேவிகுளம் வியாபாரிகள், விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மூணாறில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் ரூ.381 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்.8ம் தேதி லாக்காடு கேப் சாலையில் திடீரென்று மண்சரிவு ஏற்பட்டது. இதில் பாறைகள் உருண்டு சாலைக்கு வந்ததால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் மூணாறில் இருந்து மதுரை, தேனி, சின்னக்கானல், சூரியநல்லி போன்ற இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மாற்று வழியான ராஜக்காடு, ராஜகுமாரி வழியாக பூப்பாறை சென்று அங்கிருந்து குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லும் சூழல்நிலை உருவானது. மண்சரிவு ஏற்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் சாலைகளை சீரமைத்து பாதையை திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியப்போக்கு காட்டுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் சாலை துண்டிக்கப்பட்டதன் காரணமாக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. இதனால் அவர்களை நம்பி வாழ்கை நடத்தும் வியாபாரிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் வியாபாரிகள் கடைகளை அடைக்கவேண்டிய சூழல் உருவானது.

எனவே, லாக்காடு கேப் சாலையை உடனடியாக திறக்க வேண்டும் என்று வழியுறுத்தி மூணாறு அருகே தேவிகுளம் பகுதியில் உள்ள வியாபாரிகள், விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், மதத் தலைவர்கள் ஓன்று சேர்ந்து தேசிய நெடுஞ்சாலையை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற மறியலால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதன் பின்பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் தேவிகுளம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தை தேவிகுளம் யூனிட் வியாபாரி விவசாய சங்கத்தின் தலைவர் சாமுவேல் தலைமை வகித்தார். வியாபாரி விவசாய சங்கத்தின் பொருளாளர் கே.கே விஜயன் போராட்டத்தை துவங்கி வைத்தார். சுனில்குமார் வரவேற்றார்.

Tags : Lacadu Cape Road ,Munnar ,
× RELATED மூணாறில் குறைந்த செலவில் தங்கும் வசதி: கேரள லாட்ஜ் பஸ்தினமும் ஹவுஸ் புல்