×

காரைக்குடியில் வேகத்தடைகளால் ஏற்படும் விபத்துகள்

காரைக்குடி, நவ. 14: காரைக்குடியில் சாலைகளில் உள்ள வேகத்தடைகள் தெரியாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்ட் வண்ணம் தீட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில், நகராட்சி கட்டுப்பாட்டில் 146 கிலோ மீட்டர் சாலையும், நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 16 கிலோ மீட்டர் சாலையும் உள்ளது. நகர் பகுதியில் ஆட்டோ, டூவீலர், கார் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்கி வருகின்றன. நகர் பகுதிக்குள் 30 கிலோ மீட்டர் வேகத்தில்தான் வர வேண்டும் விதிமுறை உள்ளது. இதனை, எந்த வாகன ஓட்டிகளும் கண்டு கொள்வது இல்லை. தனியார் பஸ் மற்றும் டிப்பர் லாரிகள் அசுர வேகத்தில் தான் இயக்கப்படுகிறது. அதேபோல் டூவீலர் ஓட்டுபவர்களும் அதி வேகத்திலேயே வாகனங்களை ஓட்டுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்தவும், விபத்தை தடுக்கவும் சாலைகளில் போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி சார்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகர் பகுதிகளில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகள் முறையாக அமைக்கப்படாமல் உள்ளன. வேகத்தடை அமைப்பட்டுள்ள பகுதிகளில் எச்சரிக்கை போர்டு வைக்க வேண்டும்.

அல்லது வேகத்தடைகளில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க வேண்டும். வேகத்தடை அமைந்துள்ள இடத்திற்கு சற்று முன்பு வெள்ளை நிறத்தில் கோடு போட்டு இருக்க வேண்டும். இது போன்ற எந்த விதமான எச்சரிக்கைகள் வேகத்தடைகளில் இல்லை. அதேபோல் முக்கிய சாலைகளில் திடீர் என இரவோடு இரவாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டு விடுகின்றன. இதனால், வேகத்தடை இருப்பது தெரியாமல் கீழே விழும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. விபத்தை தடுக்க அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளே விபத்துக்கு காரணமாக மாறி வருகின்றன.

சமூகஆர்வலர் வெங்கட்பாண்டி கூறுகையில், ‘வேகம் மற்றும் விபத்தை கட்டுப்படுத்த வேகத்தடைகள் அமைப்பது வரவேற்க கூடியது. ஆனால் இதனை முறையாக அமைக்க வேண்டும். ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான வேகத்தடைகள் உள்ளன. சில இடங்களில் ரயில்வே கிராசிங்களுக்கு அமைக்கப்படும் வேகத்தடைகள் போன்று அமைக்கின்றனர். வேகத்தடைகள் மிகவும் உயரமாக அமைப்பதால் டூவீலர்களில் ஏறி இறங்குவதற்குள் தடுமாறி கீழே விழுந்துவிட வேண்டிய நிலை உள்ளது. தவிர சாலைகளில் திடீர் என அமைக்கப்படும் வேகத்தடைகளால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. வேகத்தடைகளை பொருத்தவரை பிளாஸ்டிக் வேகத்தடைகளே அமைக்க வேண்டும். ஆனால், இது போன்று செய்வது இல்லை. வேகத்தடைகளில் முறையாக எச்சரிக்கை அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். அல்லது வேகத்தடைகள் உள்ள இடங்களில் ஒளிரும் அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.

Tags : Accidents ,Karaikudi ,
× RELATED இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி