×

அனைத்து கிராமங்களுக்கும் 100% பயிர் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

சிவகங்கை, நவ. 14: சிவகங்கை மாவட்டத்தில் 2018ம் ஆண்டிற்கு பாதிப்பிற்கு உள்ளான அனைத்து கிராமங்களுக்கும் நூறு சதவீத பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக போதிய மழையின்மை, காலம் தவறிய பருவ மழை உள்ளிட்டவற்றால் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. 2018-2019ம் ஆண்டில் ஒரு லட்சத்து 33ஆயிரத்து 335ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. 85ஆயிரத்து 624விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். போதிய மழையின்றி வறட்சியால் அனைத்துப் பயிர்களும் முழுமையாக கருகின. மாவட்டம் முழுவதும் மொத்தமுள்ள 520வருவாய் கிராமங்களில் 184வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே நூறு சதவீத இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 153வருவாய் கிராமங்களுக்கு 25சதவீதமும், எஞ்சிய 187வருவாய் கிராமங்களுக்கு 12சதவீதம், 14சதவீதம், 21சதவீதம் என ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு அளவில் மிகக்குறைவாக இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரியாக நூறு சதவீதம் முற்றிலும் விளையாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு அளவில் இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: நேரடியாக பயிர் பாதிப்பை ஆய்வு செய்யாமல் சேட்டிலைட் மூலம் பயிர் பாதிப்பை ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளனர். விளைச்சலே இல்லாமல் பயிர் வளர்ச்சியை வைத்து எப்படி இழப்பீட்டை நிர்ணயிக்க முடியும். வளர்ந்த பயிரோ, வளராத பயிரோ விளையவில்லை எனில் அனைத்தும் ஒரே மாதிரி வைக்கோலாகத்தான் போகும். உரிய கணக்கீடு இல்லாமல் தனியார் நிறுவனம் இழப்பீட்டை அறிவித்துள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் ஏற்பட்ட பாதிப்பை கணக்கில் கொண்டு அனைத்துப் பகுதிகளுக்கும் நூறு சதவீத இழப்பீடு வழங்க வேண்டும். ஆண்டுதோறும் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கும் போது குறிப்பிட்ட பகுதி விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருக்க அனைத்து பகுதி விவசாய நிலங்களையும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : villages ,
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு