×

நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பரமத்திவேலூர், நவ.14: திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பரமத்தி காந்திநகரில் உள்ள 25க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. அங்கிருந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு, தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளர். அவர்களை நேற்று பரமத்திவேலூர் எம்எல்ஏ கே.எஸ்.மூர்த்தி சந்தித்து வேட்டி, சேலை மற்றும் அரிசி ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினார். கடந்த சில நாட்களாக சேலம், ஏற்காடு மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பரமத்தி இடும்பன் குளம் நிரம்பி கரையோரமுள்ள பரமத்தி காந்தி நகரை வெள்ளநீர் சூழ்ந்து 25க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதை தொடர்ந்து, கலெக்டர் மெகராஜ் அப்பகுதியில்  இருந்தவர்களை மீட்டு தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து அங்கிருந்த 60க்கும் மேற்பட்டோரை வருவாய்த் துறையினர் மீட்டு பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் தங்க வைத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளும், பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ உதவிகள் மற்றும் பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பரமத்திவேலூர் எம்எல்ஏ கே.எஸ்.மூர்த்தி, தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் 2 கிலோ அரிசி ஆகியவற்றை வழங்கினார். மேலும் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள வெள்ளநீர் வடியவும், மீண்டும் மழைக்காலங்களில் அப்பகுதிக்குள் தண்ணீர் புகாதவாறு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Tags : relief camps ,
× RELATED அரசின் நிவாரண முகாம்களுக்கு உடனே...