×

மானாமதுரை அருகே ஷட்டரை அடைக்காததால் வெளியேறிய வைகை நீர்

மானாமதுரை, நவ.14: மானாமதுரை அருகே ஷட்டரை அடைக்காததால் வைகை நீர் கால்வாயில் வெளியேறியது. ராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகள் எச்சரிக்கையை அடுத்து ஷட்டர் அடைக்கப்பட்டது. வைகை பூர்வீக பாசன பகுதிகளாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்நிலையில் அவற்றின் பாசன வசதிக்காக நவ.9ம் தேதி வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. நவ.16ம் தேதி 7 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் பகுதிக்கு (3 ரீச்) ஆயிரத்து 441 மில்லியன் கன அடியும், நவ.17 முதல் நவ.21-ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 2-ம் பகுதிக்கு (2 ரீச்) 386 மில்லியன் கன அடியும், நவ.22 முதல் நவ.25-ம் தேதி வரை 4 நாட்களுக்கு முதல் பகுதியில் (1 ரீச்) இருக்கும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 4 கண்மாய்களுக்கு 48 மில்லியன் கன அடியும், நவ.26 முதல் டிச.2ம் தேதி வரை 7 நாட்களுக்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முதல் பகுதிக்கு 240 மில்லியன் கன அடியும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது ராமநாதபுரம் பகுதிக்கு தண்ணீர் செல்வதால் மதுரை, சிவகங்கை மாவட்ட கால்வாய்களின் ஷட்டர்களை அடைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் மானாமதுரை அருகே கீழப்பசலை கால்வாய் அடைக்கவில்லை. இதனால் அந்த கால்வாய் வழியாக வைகை நீர் சென்றது. இதையடுத்து நேற்று அங்கு வந்த ராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகள் ஷட்டரை அடைக்காததை கண்டித்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஷட்டரை அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Vaigai ,Manamadurai ,shutter ,
× RELATED பரமக்குடி வைகை ஆற்றில் பிரியும்...