×

பேளுக்குறிச்சி கணவாய்மேட்டில் அதிவேக வாகனங்களில் சிக்கி இறக்கும் குரங்குகள்

சேந்தமங்கலம், நவ.14: பேளுக்குறிச்சி கணவாய்மேடு ஆஞ்சநேயர் கோயில் பகுதியில், அதிவேகமாக வரும் வாகனங்களில் சாலையை கடக்கும் குரங்குகள், குட்டியுடன் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி கணவாய்மேட்டில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.  நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் வழியாக, ராசிபுரம் செல்லும் சாலையில் இந்த கோயில் உள்ளதால், வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள், சரக்கு வாகனங்கள் இந்த கோயில் முன்பு நிறுத்தி, ஆஞ்சநேயரை வழிபட்டு செல்வது வழக்கம். இந்த கோயில் சிறிய கரட்டின் மீது அமைந்துள்ளது. இந்த கரட்டில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகிறது.  கோயிலுக்கு வரும் பக்தர்கள், பழம், தேங்காய் மற்றும் உணவு பொருட்களை குரங்குகளுக்கு கொடுப்பது வழக்கம்.

 இவ்வாறு பக்தர்கள் வழங்கும் பொருட்களுக்காக, பகல் நேரம் முழுவதும் சாலையோரம் அதிக அளவில் குரங்குகள், குட்டிகளுடன் சுற்றித் திரிகின்றன. இந்த குரங்குகள் சாலையை கடக்கும் சமயங்களில், அவ்வழியாக அதிவேகமாக வரும் வாகனங்கள் மோதி உயிரிழக்க நேரிடுகிறது. இதுவரை இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் குட்டிகளுடன் அடிபட்டு இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கணவாய்மேடு பகுதியில்  அதிவேகமாக வரும் வாகனங்கள் மோதி, சாலையை கடந்து செல்லும் குரங்குகள் உயிரிழக்கின்றன. இதை தடுக்க, நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் வேகத்தடை அமைத்து, கோயிலை கடக்கும் வரை வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும் என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் பழம், உணவு பொருட்களை சாலையில் வீசுவதை தடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்