×

பெட்டிக்கடைகளில் மதுபானம் விற்பனை தடுக்கக்கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் தர்ணா: கலெக்டரிடம் மனு வழங்கினர்

திருவண்ணாமலை, நவ.14:  திருவண்ணாமலை நகராட்சியில் பெட்டிக்கடைகளில் மதுபானம் விற்பனையை தடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட ராமலிங்கனார் தெரு, கங்கையம்மன் கோயில் பகுதிகளில் பெட்டிக்கடைகளில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறது. நாள் முழுவதும் விற்பனை நடைபெறுவதால், மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு அவ்வழியாக செல்லும் பெண்களிடம் ரகளையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல்அறிந்தும் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ராமலிங்கனார் தெரு மற்றும் கங்கையம்மன் கோயில் பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள், நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது, அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் அங்கு வந்து  பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அவர்களை வெளியே அழைத்து வந்து, ‘அனைவரும் கலெக்டரை சந்திக்க முடியாது, உங்களது கோரிக்கையை மனுவாக கலெக்டரிடம் அளியுங்கள்’ என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள், தங்களது கோரிக்கை மனுவை எழுதி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் வழங்கினர்.

Tags : collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...