×

பெரியாறு கால்வாயில் தண்ணீர் நிறுத்தம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நவ.25ல் குடியேறும் போராட்டம்

சிவகங்கை, நவ. 14: சிவகங்கை மாவட்டத்திற்கான பெரியாறு நீர் திறப்பை நிறுத்தியதால் நவ.25 அன்று மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்துள்ளனர். பெரியாறு நீரை பாசனமாக கொண்டு சிவகங்கை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 6ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. பெரியார் பாசன பகுதி மேலூர் பிரிவின் கீழ் உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக மேலூர் பிரிவில் ஒரு போக சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டும் சிவகங்கை மாவட்ட பகுதிகளுக்கு உரிய பங்கு நீர் வழங்கப்படுவதில்லை. கடந்த ஆண்டு விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பிறகு மிகக்குறைவான அளவு நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு மதுரை மாவட்டத்திற்கு ஆக.29 முதல் பெரியாறு நீர் இருபோக சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டது. அக்.9 முதல் ஒரு போக சாகுபடிக்கு வினாடிக்கு ஆயிரத்து 130கன அடி நீர் திறக்கப்பட்டது. ஆனால் சிவகங்கை மாவட்டத்திற்கு நீர் வழங்கப்படுவது குறித்து மேலூர் பிரிவு அதிகாரிகள் எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை. இதையடுத்து அக்.22 அன்று சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன கடைமடை பகுதியான சோழபுரத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அக்.22 மாலை மேலூர் பிரிவில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு கட்டாணிபட்டி ஒன்று, இரண்டு மற்றும் 48 கால்வாய் ஆகிய கால்வாய்களில் நீர் திறக்கப்பட்டது.

பின்னர் இந்த கால்வாய்களில் திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டு சில நாட்கள் சீல்டு கால்வாயில் நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நவ.7ம் தேதி காலை 7 மணியுடன் சீல்டு கால்வாயில் வந்த நீரும் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு சிவகங்கை மாவட்டத்திற்கான எந்த கால்வாயிலும் நீர் திறக்கவில்லை. இதுகுறித்து மேலூர் பிரிவு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் முறையிட்டும் பயனில்லை. இதனால் நடுகை செய்த பயிர்கள், நடுகைக்கு தயார் நிலையில் உள்ள பயிர்கள் பாதிக்கப்படும். எனவே சிவகங்கை மாவட்டத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தி நவ.25ம் தேதி மதுரை பெரியாறு வைகை பாசன தலைமை பொறியாளர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவது என விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். பெரியாறு பாசன விவசாயிகள் கூறியதாவது: போராட்டத்திற்கு பின் மூன்று கால்வாய்களில் நீர் திறக்கப்பட்டது. ஆனால் மிகக்குறைவாக 30 கன அடி நீர் திறந்தனர். அந்த நீரையும் நிறுத்தி விட்டனர். எனவே சிவகங்கை மாவட்டத்திற்கு நீர் வழங்காமல் முறைகேடாக செயல்படும் அதிகாரிகளை கண்டித்தும், மாவட்டத்திற்கு உரிய நீரை வழங்க வலியுறுத்தியும் நவ.25ல் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.

Tags : Water Supply ,Periyaru Canal ,
× RELATED பெங்களூருவில் காவிரி நீரை அவசியமற்ற...