×

விதை விற்பனை நிலையங்களில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு

கிருஷ்ணகிரி, நவ.14: கிருஷ்ணகிரியில், விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட வேளாண் துணை இயக்குனர், விவசாயிகள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். கிருஷ்ணகிரியில் உள்ள விதை விற்பனை நிலையங்களில், வேளாண்மை துணை இயக்குநர் பச்சையப்பன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு வைக்கப்பட்டுள்ள உரங்கள், அவற்றின் விலை விபரங்கள் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், விற்பனையாளர்களிடம் அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. உரிமம் பெறாத விற்பனை நிலையங்களுக்கு விதைகளை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார். மேலும், அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 18 வட்டாரங்களில், சுமார் 4 லட்சம் எக்டர் பரப்பில் நெல், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள், பருத்தி போன்ற பயிர்களும், பீன்ஸ், முட்டைக்கோஸ், தக்காளி, வெண்டை, கத்தரி, கொத்தமல்லி, புதினா போன்ற தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யும் போது விதை, ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், விற்பனை விலை ஆகிய விவரங்களை குறிப்பிட்டு, விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நர்சரிகள் ரசீதுகள் வழங்க வேண்டும். மேலும், இருப்புப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.

விற்பனை நிலையம் மற்றும் நர்சரிகளின் முகப்பில் விற்பனை பலகையில் விதை, ரகம், நிலை, இருப்பு அளவு, விற்பனை விலை ஆகிய விவரங்களை தெளிவாக விவசாயிகளின் பார்வையில் தெரியும்படி வைக்க வேண்டும். விதை நிறுவனங்கள், நேரடியாக விவசாயிகளுக்கு விதைகள் விற்கக் கூடாது. ஒட்டுமொத்த விற்பனையாளர்கள், விதை விற்பனை உரிமம் பெறாத விற்பனை நிலையம் மற்றும் நர்சரிகளுக்கு விதைகள் விற்பனை செய்யக்கூடாது. விற்பனை உரிமம் இல்லாமல் விற்பனை செய்வது, விதைச்சட்டம் 1966 மற்றும் விதை கட்டுப்பாடு ஆணை 983ன்படி கடுமையான குற்றமாகும்.  எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்து விதை விற்பனை நிலையம் மற்றும் நர்சரி உரிமையாளர்கள், விதை விற்பனை உரிமம் பெற பாரத ஸ்டேட் வங்கி கிளையில் ₹1000 சலான் மூலம் செலுத்தி, www.tnagrisnet.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தில், விதை விற்பனை நிலையம் அல்லது நர்சரி உரிமையாளர் பாஸ்போர்ட் அளவு போட்டோ 3, இணையம் வழியாக விண்ணப்பித்த படிவம் “ஏ”, விதை விற்பனை நிலையம் அல்லது நர்சரி இருப்பிட வரைப்படம், நில வரி ரசீது அல்லது 5 வருட வாடகை ஒப்பந்த நகல், ஆதார் அட்டை மற்றும் பேன் கார்டு நகல், சலான் ஆகிய ஆவணங்களுடன் சென்று புதிய விற்பனை உரிமம் பெற்று கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Inspection ,Deputy Director of Agriculture ,seed stalls ,
× RELATED பெரும்பேடு அணைக்கட்டு பகுதியை கலெக்டர் ஆய்வு