×

நகரின் மையப் பகுதிக்கு நூலகத்தை மாற்ற வேண்டும்

தொண்டி, நவ.14:  தொண்டியில் வாசகர்கள் அதிகம் செல்லாத பகுதியில் உள்ள நூலகத்தை நகரின் மைய பகுதிக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் நகர் பகுதியாகும். ஆரம்ப காலம் முதல் கல்விக்காகவும் கல்வி வளர்ச்சிக்காகவும் பல்வேறு தானங்கள் செய்த இடமாகும். பல நூறு ஏக்கர் நிலத்தை பள்ளி கட்டுவதற்கு தானமாக கொடுத்துள்ளனர். ஆனால் இப்பகுதியில் தற்போது நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தொண்டியின் மைய பகுதியான சத்திரம் தெருவில் அரசு கட்டிடத்தில் நூலகம் இயங்கி வந்தது. கட்டிடம் இடிந்ததால் புதுக்குடி பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. இது நகரின் கடைசி பகுதியாக இருப்பதால் வாசகர்கள் அதிகமாக செல்வது கிடையாது. மேலும் பெரும்பாலும் இந்த நூலகம் மூடியே கிடைப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். பள்ளி மாணவர்கள் மற்றும் வாசகர்களை அதிகம் கொண்ட தொண்டியில் நூலகம் செயல்படாமல் இருப்பது பெரும் வேதனை அளிக்கிறது.

கல்வி பணிக்காக பல நூறு ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்த இப்பகுதியில் நூலகம் அமைக்க இடம் இல்லாததை போல் ஊரின் கடைசியில் வைத்துள்ளது வேதனை அளிப்பதாக கூறுகின்றனர். வாசகர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக நகரின் மைய பகுதிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தொண்டி தமுமுக மாநில செயலாளர் சாதிக்பாட்சா கூறியது, சத்திரம் தெருவில் உள்ள அரசு கட்டிடம் சேதமடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இதை பராமரித்து மீண்டும் இங்கு நூலகத்தை கொண்டு வரவேண்டும். தற்போது நூலகம் இருக்கும் கட்டிடத்திற்கு வாசகர்கள் அதிகம் செல்லாததால் இரவு நேரத்தில் மதுபானம் அருந்தும் இடமாக மாறி வருகிறது. அதனால் உடனடியாக நூலகத்தை இடம் மாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : part ,city ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்