×

வீணாக மழைநீர் கடலுக்கு செல்வதால் 20 வருடமாக நிரம்பாத ஊரணி

சாயல்குடி, நவ.14:   கடலாடி அருகே உள்ள கே.கருங்குளம், பூதங்குடி கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ஊரணியில் தண்ணீர் நிறைந்து காணப்படும் காலத்தில், இரண்டு கிராமங்கள் மட்டுமின்றி அருகிலுள்ள கரிசல்குளம், இந்திரா நகர், கடலாடி தெற்கு குடியிருப்பு பகுதி மக்களும் பயன்படுத்தி வந்தனர். கடந்த 20 வருடங்களாக போதிய நீர்வரத்து வராமல் ஊரணி நிறையாமல் கிடக்கிறது. இதனால் ஊரணிக்கு வரும் வரத்து கால்வாய், மடைகள், 4 நான்கு படித்துறைகள் சேதமடைந்து கிடக்கிறது. இதுகுறித்து கருங்குளம் கிராமமக்கள் கூறும்போது, கருங்குளம் கண்மாய் பொதுப்பணித் துறை சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்டது. இதனால் தற்போது பெய்த மழைக்கு கண்மாயில் தண்ணீர் பெருகி காணப்படுகிறது. இதுபோன்று அருகிலுள்ள பூதங்குடி கண்மாயும் நிறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் இரண்டு கண்மாய் பெருகி வழிந்தோடும் உபரி தண்ணீர் மற்றும் மழையின் போது ஓடி வரும் தெருத்தண்ணீர், காட்டுபகுதி தண்ணீர் ஆகியவை கருங்குளம் ஊரணியில் வந்து சேருவதற்கு கால்வாய் வசதி அமைக்கப்பட்டது. நாளடைவில் தூர்ந்துபோய் விட்டதால் தண்ணீர் ஊரணி வந்து சேராமல் காலனி பகுதியிலுள்ள மீனங்குடி சாலையோரம் செல்லக் கூடிய கால்வாய் வழியாக கடுகுசந்தை பகுதி வழியாக வழிந்தோடி வீணாக கடலில் கலந்து வருகிறது. எனவே வீணாக செல்லும் தண்ணீரை ஊரணியில் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையின் போது வீணாக ஓடி செல்லும் தண்ணீரை ஊரணியில் பெருக்க மடைகள் அல்லது கால்வாய் அமைக்க வேண்டும். ஊரணியில் சேதமடைந்து கிடக்கும் மடைகள், வரத்து கால்வாய், படித்துறைகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : rally ,
× RELATED அர்ஜெண்டினாவில்...