×

எமனேஸ்வரம்-நயினார்கோவில் சாலை குறுகியதாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல்

பரமக்குடி, நவ.14:  எமனேஸ்வரம்-நயினார்கோவில் சாலை குறுகியதாக உள்ளதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. சாலைia விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி அருகே மிகவும் பழமை வாய்ந்த கோயில்களை கொண்டுள்ள நகராக எமனேஸ்வரம் உள்ளது. அதிகளவில் நெசவாளர்கள் உள்ளதால், எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். எமனேஸ்வரம் வழியாக நயினார்கோவில், பாண்டியூர், காடரனந்தகுடி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், பாண்டியூர் வழியாக செல்லும் ராமநாதபுரத்திற்கும் பேருந்துகள், சரக்கு வாகனங்கள், டூவீலர்கள் என தினமும்  ஆயிரத்திற்கு மேற்பட்டவைகள் வந்து செல்கிறது.

நயினார்கோவிலுக்கு தினமும் சுற்றுலா மற்றும் பக்தர்களின் வாகனங்கள் அதிகமாக எமனேஸ்வரம் வழியாக வந்து செல்கிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதனை சரி செய்ய  வேண்டிய போக்குவரத்து போலீசார் பரமக்குடி நகர் பகுதியை தவிர வேறு எங்கும் பணியை செய்வதில்லை. இதனால் போக்குவரத்தை சரி செய்ய போலீசார் இல்லாமல், பல நேரங்களில் அருகிலுள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் போக்குவரத்து நெரிசலை சரி செய்து வருகின்றனர்.

எமனேஸ்வரம் பஸ் நிலையம், வைகை ஆறு இறக்கம், இளையான்குடி சாலை செல்லும் வழியான மூன்று முக்குசாலையில் எதிரே வரும் வண்டி தெரியாமல், பல நேரங்களில் வாகன விபத்துகள் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எமனேஸ்வரம்  பேருந்து நிறுத்தும் இடத்தில் அரசியல் கட்சியினர் கூட்டம் நடத்துவதும், இங்கு வரும் அரசியல் கட்சிகாரர்களின் வாகனங்களை சாலையில் நிறுத்துவதால், கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி வெளியில் செல்ல முடியாமல் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். ஆகையால் எமனேஸ்வரம்-நயினார்கோயில் சாலையை விரிவுபடுத்தி போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Emaneswaram-Nainarko ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...