கடலாடி அருகே மழைக்கு இடிந்து விழும் வீடுகள்

சாயல்குடி, நவ.14:  கடலாடி அருகே கருங்குளம் காலனியில் மழைக்கு வீடுகள் ஒழுகுவதும், இடிந்தும் வருவதால் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். கடலாடி ஊராட்சி ஒன்றியம், கருங்குளம் ஊராட்சியில் உள்ள கருங்குளம் காலனி, கே.கரிசல்குளம் காலனி, இந்திரா நகர் காலனி ஆகிய தெருக்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கட்டிட கூலி தொழில், சுமை தூக்கும் தொழில், துப்புறவு பணி மற்றும் நூறுநாள் வேலை மட்டுமே தொழிலாக கொண்ட இந்த காலனிகளில்  கழிவுநீர் கால்வாய், கழிவறைகள், சாலை வசதிகள் கிடையாது. அரசு கட்டிக்கொடுத்த காலனி வீடுகள் தற்போது பெய்த மழைக்கு ஒழுது வருகிறது. சில வீடுகள் இடிந்து தரைமட்டமானதால் குடியிருக்க வீடுகள் இன்றி அவதிப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து காலனி மக்கள் கூறும்போது, கருங்குளம் காலனிக்கு கடந்த 1990ம் ஆண்டில் காலனி வீடுகள் அரசு சார்பில் கட்டி தரப்பட்டது. 29 வருடங்கள் ஆன நிலையில் வீடுகள் அனைத்தும் சேதமடைந்து விட்டது. மேற்கூரை இடிந்து விழுந்ததால், தற்செயலாக சென்ரிங் வீடுகளில் தார்பாய் கொண்டு மூடி குடியிருந்து வருகிறோம். இதனால் மழை பெய்தாலும் ஒழுகி வருகிறது. வேறு வழியின்றி அதனுள் குடியிருக்கும் நிலை உள்ளது.

தற்போது பெய்த மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் இரண்டு வீடுகள் இடிந்து தரைமட்டமாகி விட்டது. இதனால் குடியிருக்க வீடுகள் இன்றி தற்காலிக கூடாரம் அமைத்து குடியிருந்து வருகிறோம். மேலும் கருவேல காட்டிற்குள் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டது, இரு கிராம மக்கள் பயன்படும் வகையில் கட்டப்பட்டது என்றாலும்,  பெண்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் அவை பயன்பாடின்றி சேதமடைந்து இடிந்து கிடக்கிறது, அதிலிருந்த தளவாடபொருட்கள், மின் மோட்டார் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும் மாயமாகி போனது. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலை உள்ளது.

மேலும் கருங்குளம் காலனி, இந்திரா நகர் காலனிக்கு கடந்த 20 வருடங்களாக சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் கிடையாது. இதனால் மழை காலங்களில் தெருக்களிலிருந்து ஓடி வரும் மழை தண்ணீர், வீடுகளுக்குள் புகுந்து விடும். தண்ணீர் செல்ல கால்வாய் வசதியில்லாததால், வீடுகளுக்கு முன் குளம்போல் தேங்கி கழிவுநீர் குளமாக தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவி வருகிறது. அவசர மருத்துவ உதவிக்கு செல்வதற்கு, ஆம்புலன்ஸ் கூட வரமுடியாது. இறந்தவர் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல முடியாத அளவிற்கு சாலை சேதமடைந்து சேரும், சகதியுமாக இருக்கிறது. நோய் வாய் பட்டவரை கட்டிலில் தூக்கிச் செல்லும் நிலை உள்ளது. எனவே கருங்குளம் ஊராட்சியில் உள்ள 3 காலனி கிராமத்திற்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரவும், பொதுமக்கள் குறைகள் குறித்து மனு அளிக்கவும், அரசு உதவிகளை பெற சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>