×

அ.தி.மு.க.வினரின் தலையீட்டால் கல்குவாரி ஏலம் நடத்த முடியாமல் ஒத்திவைப்பு

ஈரோடு, நவ.14: கல்குவாரிகள் ஏலம் விடும் விவகாரத்தில் அ.தி.மு.க.வினரின் தலையீடு காரணமாக ஏலம் நடத்த முடியாமல் ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி கிராமத்தில் உள்ள 4 கல் குவாரிகளுக்கான ஏலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. 5 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவோர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கனிம வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டர் பெட்டியில் டெண்டர் விண்ணப்பம் போட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணியுடன் டெண்டர் போடுவது நிறைவடைந்து, நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சில நிர்வாக காரணங்களுக்காக நேற்று நடைபெற இருந்த டெண்டர் ஏலம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும், வரும் 19ம் தேதி நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.அ.தி.மு.க.வினரின் தலையீடு காரணமாக டெண்டர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 4 கல் குவாரிகளையும் ஆளுங்கட்சியினர் மட்டுமே ஏலம் எடுக்க முடிவு செய்து, மற்றவர்களை ஏலத்தில் பங்கேற்க குறிப்பாக, டெண்டர் கோர விடாமல் தடுக்கும் வகையில் திட்டம் வகுத்து அ.தி.மு.க.வினர் செயல்பட்டு வந்தனர். அதையும் மீறி சிலர் டெண்டர் கோரியதால், டெண்டர் தங்களுக்கு கிடைக்காமல் போய்விடும் என்பதால் அதிகாரிகளுக்கு ஆளுங்கட்சியினர் கொடுத்த அழுத்தம் காரணமாக தற்போது டெண்டர் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : AIADMK ,Kalkwari ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...