×

2 மாதமாக இரவில் இருளில் மூழ்கும் திருச்செந்தூர் ரயில் நிலைய பகுதி

திருச்செந்தூர், நவ.14:  திருச்செந்தூர் ரயில் நிலைய பகுதி கடந்த 2 மாதங்களாக இரவில் இருளில் மூழ்குவதால் பக்தர்கள், பெண்கள் அவதிப்படுகின்றனர். அறுபடை வீடுகளில் 2ம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் பிரசித்தி பெற்றதாகும். ஆன்மிக சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரயில்கள், பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர். செந்தூர் எக்ஸ்பிரஸ், நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர், தூத்துக்குடி-திருச்செந்தூர் பாசஞ்சர், பாலக்காடு பாசஞ்சர் உள்ளிட்ட ரயில்கள் திருச்செந்தூருக்கு வந்து செல்கின்றன. இந்த ரயில்களில் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், பக்தர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் பயணம் செய்கின்றனர். திருச்செந்தூர் ரயிலில் வந்து இறங்கும் அல்லது செல்லும் பயணிகள் ரயில் நிலையம் அருகிலுள்ள ரயிலடி ஆனந்த விநாயகர் கோயில் வழியாகத்தான் வரவேண்டும். ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இப்பகுதியில் உள்ள ஒருசில மின்விளக்குகளை தவிர மற்ற விளக்குகள் இரவில் கடந்த2 மாதங்களாக எரியவில்லை.இதனால் இப்பகுதி முழுவதும் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரத்தில் ரயில் இறங்கி வரும் பயணிகள் மேடு, பள்ளம் தெரியாமல் தடுமாறுகின்றனர். அதிலும் வயதானவர்களின் நிலைமையை சொல்லவே வேண்டாம். இருளை பயன்படுத்தி வழிப்பறி சம்பவங்களும் நடக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Tags : Thiruchendur Railway Station ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்