×

பெரியபாளையம் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்: பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை, நவ.14: பெரியபாளையம் அருகே காலை, மாலை நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் மாணவர்கள் பஸ்படிக்கட்டில் தோங்கிய படி ஆபத்தான பயணம் மேற்கொள்வேண்டிய நிலை உள்ளது. எனவே, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள், மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராம எல்லையில்  அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு கன்னிகைப்பேர், கன்னிகைப்பேர் காலனி, மஞ்சங்காரணை, தானாகுளம், பனப்பாக்கம், ஜெயபுரம் ஆகிய 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து  6 முதல் 12ம் வகுப்பு வரை 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த மாணவர்கள் காலையில் பள்ளிக்கு வருவதற்கும், மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு செல்வதற்கும் பெரியபாளையத்திலிருந்து செங்குன்றத்திற்கும், செங்குன்றத்திலிருந்து பெரியபாளையத்திற்கும்  செல்லும் அரசு மற்றும் மாநகர பஸ்களை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில்,மாலையில் பள்ளி விட்டதும் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு கன்னிகைப்பேர்  அரசு பள்ளி முன் உள்ள  மதுரவாசல் பஸ் நிறுத்தத்தில்  பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. ஒரு சில பஸ்கள் மட்டுமே இந்த பஸ் நிறுத்தத்தில் நிற்கிறது. மற்ற பஸ்கள் நிற்பதில்லை. அவ்வாறு நிறுத்தப்படும் பஸ்சில் கூட்டம்  நிரம்பி வழிகிறது. மாணவர்கள் படியில் தொங்கிய படியும், பஸ் கூரையின் மீது ஏறியும்  ஆபத்தான பயணம் செய்கிறார்கள். எதிர்பாராமல் தவறி விழுந்து காயமடையும் நிகழ்வுகளும் நடக்கிறது.  எனவே, பள்ளி நேரத்திற்கு மட்டும் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து அப்பகுதி மாணவர்கள், பெற்றோர்  கூறியதாவது:
ஊத்துக்கோட்டை மற்றும் பெரியபாளையத்தில் இருந்து வரும் அரசு மற்றும் மாநகர பஸ்கள் கன்னிகைப்பேர் மதுரவாசல் பஸ் நிறுத்தத்தில் பெரும்பான்மையான பஸ்கள் நிற்பதில்லை. பெரியபாளையத்தில் இருந்து வரும் சில பஸ் நிறுத்தத்தில் நிற்கிறது. இதில் முண்டியடித்து ஏறுகின்றனர். அப்போது சிலருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.  மாணவர்கள் பஸ் படியில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் செய்கிறார்கள். ஒரு சில மாணவர்கள் ஷேர் ஆட்டோக்களில் செல்கிறார்கள். எனவே, பள்ளி நேரத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கூறினர்.

Tags : bus stall ,
× RELATED 128 மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை