×

கும்மிடிப்பூண்டி அருகே கீழ்முதலம்பேடு ஏரி நீரில் ரசாயனம் கலப்பு?

* 2 மாடுகள் சாவு
* விவசாயிகள் வேதனை

கும்மிடிப்பூண்டி, நவ. 14: கீழ்முதலம்பேடு ஏரி நீரை குடித்த 2 மாடுகள் செத்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த கீழ்முதலம்பேடு ஊராட்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் விவசாயம் செய்து வருகின்றனர். இதற்கு தேவையான தண்ணீரை  கிராமத்தை ஒட்டியுள்ள 600 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய ஏரியில் இருந்து எடுக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் ஏரிக்கு நீர்வரத்து இல்லை. இதனால் நீரின்றி ஏரி வறண்டது. இதையடுத்து ஏரியை தூர்வார வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மனு அளித்தனர்.  அதைத்தொடர்ந்து குடிமராமத்து திட்டத்தில், ₹ 46 லட்சம் நீதி ஒதுக்கீடு செய்து  பணிகள் துவங்கப்பட்டது. குடிமராமத்து பணிகள் தொடங்கிய சில நாட்களிலே மழை பெய்ய தொடங்கியதால் ஏரிக்கு நீர் வந்தது. இதனால் மராமத்து பணிகள் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது.  சிறிதளவு மழைக்கே கரை சேதமானது. செடி கொடிகள் வளர்ந்தது. ஆங்காங்கே குட்டைபோல் தேங்கிய தண்ணீரில் பாசி படர்ந்து காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாடுகள்  கீழ்முதலம்பேடு ஏரியில் புல் மேய்ந்து விட்டு, தண்ணீர் குடிக்கச் சென்றது.  தேங்கியிருந்த   தண்ணீரை குடித்த  2 மாடுகள் மயங்கி விழுந்தன. இதைக்கண்ட கிராமப்புற மக்கள், உடனடியாக  முதலுதவி செய்தனர். ஆனால் சிறிது நேரத்தில் 2 மாடுகளும் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஏராளமான மீன்களும் செத்து மிதந்தது தெரிய வந்தது. இது குறித்து வட்டாட்சியர் சுரேஷ் பாபுவுக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். அங்கு தேங்கியிருந்த தண்ணீரை சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், பரிசோதனையில் தான் ஏரி தண்ணீர் மாசடைவதற்கான காரணம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.   இதைப்பற்றி பொதுமக்கள் கூறுகையில்,  ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு  தமிழக அரசு சார்பில்  குடிமராமத்து  திட்டத்திற்காக  ஆங்காங்கு  தூர்வாரப்பட்டது. அதன்பயனாக சமீபத்தில் பெய்த மழைநீர் வரத்து தொடங்கியது. இதில் ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வந்த கழிவு நீர் கலந்திருக்கலாம்.  அல்லது யாராவது ரசாயன கலவையை ஏரி நீரில் கலந்திருக்கலாம். இதனால் தான் ஏரி நீர் விஷத்தன்மையாக மாறியுள்ளது.  இதனை கண்காணிக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Kummidipoondi ,Lake Kozhikode ,
× RELATED இன்னொரு முறை பாஜ ஜெயித்தால் தேர்தல்...