×

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆயிரம் சதுரயில் மாடி தோட்டம்: கருங்குழி பேரூராட்சி அசத்தல்

மதுராந்தகம், நவ. 14: கருங்குழி பேரூராட்சி அலுவலக மாடியில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆயிரம் சதுரடியில் மாடி தோட்டம் அமைத்து பேரூராட்சி நிர்வகாம் அசத்தியுள்ளது.சென்னையில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் மதுராந்தகம் அருகே கருங்குழி பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் மாடியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாதிரி மாடித் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மாடி தோட்டத்தை பார்த்து பொதுமக்கள் தங்களது வீடுகளிலும் இதேபோன்று தோட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்த மாடி தோட்டம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி அலுவலகத்தின் 2வது மாடியில் சுமார் ஆயிரம் சதுரடி பரப்பளவில் இந்த மாடி தோட்டத்தை அமைத்துள்ளனர்.இதில் கத்தரி, முள்ளங்கி, கொத்தவரை, வெண்டை, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் பல்வேறு கீரை வகைகள் பயிரிடப்பட்டுள்ளன. மேலும், மூலிகை செடிகளான இன்சுலின், சுள்ளுமுடையான், கற்றாழை, பிரண்டை, மருள் ஆகியவையும், பூக்களில் கனகாம்பரம், சாமந்தி, மரிக்கொழுந்து உள்பட பல்வேறு பூச்செடிகளும் நடப்பட்டுள்ளன.

பொதுமக்களின் பார்வைக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த மாதிரி மாடி தோட்டத்தை பார்த்து, தங்களது வீடுகளில் இதேபோன்று தோட்டங்களை உருவாக்கி பூச்சி கொல்லிகள், மருந்துகள் இல்லாத காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவற்றை விளைவித்து வீட்டு தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.மேலும், தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டுமின்றி நகர்ப்புறங்களிலும் நெருக்கமான வீடுகளில் வசிக்கும் நிலை உள்ளது. அவர்களுக்கு வீட்டின் அருகே தோட்டங்களை ஏற்படுத்துவது சாத்தியமாகாது. இதுபோன்ற நெருக்கடியான வீடுகளில் வசிப்பவர்களுக்கு, இந்த மாடி தோட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும். இதன் மூலம் வீட்டில் உள்ள சிறுவர்வகளுக்கும் விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். பெரியவர்களும் தங்களின் நேரத்தை பயனுள்ளதாக செலவிட முடியும். இதுமட்டுமின்றி, இதுபோன்ற மாடித்தோட்டம் அமைப்பதற்கு கருங்குழி பேரூராட்சியின் மூலம் மிகக் குறைந்த விலையில் செடிகளும் அவற்றுக்கு தேவையான இயற்கை உரங்களும் வழங்கப்படுகின்றன. தோட்டம் அமைப்பதற்கான தொழில்நுட்ப உதவிகளும் அளிக்கப்படுகின்றன.

 இதனை கருங்குழி பேரூராட்சி மட்டுமின்றி, அனைத்து பகுதியை சேர்ந்த பொதுமக்களும் இதுபோன்ற குறைந்த செலவிலான மாடித் தோட்டங்களை அமைக்க முன்வர வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் கூறுகையில், ‘இந்த மாடி தோட்டத்தின் முக்கிய நோக்கமே வீடுகளில் குப்பைகளை குறைப்பது தான். வீடுகளில் மாடி தோட்டங்களை ஏற்படுத்தும்போது வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் மக்கும் குப்பைகளை, ஒரு பகுதியில் வைத்து உரமாக மாற்றி இந்த தோட்டங்களுக்கு பயன்படுத்த முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒவ்வொரு வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளின் அளவு பாதியாக குறையும். அதுமட்டுமின்றி மக்களுக்கு பூச்சி மருந்துகள் இல்லாத இயற்கையான காய்கறிகள், கீரை வகைகள், மூலிகைகள் ஆகியவை எளிதாக கிடைத்துவிடும். அப்போது அவர்களது ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். எனவே, இந்த திட்டத்தை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் கருங்குழி பேரூராட்சி அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.பொதுமக்களும் இந்த மாடி தோட்டத்தின் பயனை அறிந்து, அதனை குறைந்த செலவில் தங்களது வீடுகளில் அமைத்து கொள்ள முன்வரவேண்டும் என்றார்.

Tags : Thousand Square Floor Garden ,
× RELATED விழிப்புணர்வு முகாம்