×

முதலமைச்சர் சிறப்பு குறைத்தீர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆளுங்கட்சியினர் திரண்டதால் வெளியேற்றப்பட்ட மக்கள்: கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த கொடுமை

காஞ்சிபுரம், நவ.14: காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைத்தீர் திட்ட முகாமில், ஆளுங்கட்சியினர் இடம் பிடித்து உட்கார்ந்து கொண்டதால், நலத்திட்ட உதவிகள் பெற வந்த பொதுமக்கள், கடும் வெயிலில் வெளியே தவித்தனர். சிலர், உடல்நிலை பாதிப்பால், அங்கேயே படுத்துவிட்டனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த கொடுமையான சம்பவத்தால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைத்தீர் திட்ட முகாமில் 26.08.2019 முதல் 31.08.2019 வரை பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில்,  காஞ்சிபுரம் வட்டத்தில் 1515 பேருக்கு ₹2 கோடியே 89 லட்சத்து 78 ஆயிரத்து 550 மதிப்பிலும், உத்திரமேரூர் வட்டத்தில் 525 பேருக்கு ₹24 கோடியே 33 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலும், வாலாஜாபாத் வட்டத்தில் 328 பேருக்கு ₹7 கோடியே 55 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பெரும்புதூர்: பெரும்புதூர் ஒன்றியம் வல்லக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  தமிழக முதலமைச்சரின்   சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் பொன்னையா தலைமை வகித்தார். பெரும்புதூர் தாசில்தார் ரமணி வரவேற்றார். பெரும்புதூர் எம்எல்ஏ பழனி, முன்னாள் கவுன்சிலர் செந்தில்ராஜன், மாத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் எறையூர் முனுசாமி, மதுரமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி இயக்குனர் சிங்கிலிபாடி ராமசந்திரன், பெரும்புதூர் துணை தாசில்தார் பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டு,  755 பேருக்கு இந்திராகாந்தி முதியோர் உதவித்தொகை, 168 இலவச வீட்டுமனை பட்டா, 69 பட்டா பெயர் மாற்றம், 43 ரேஷன் கார்டு, 53 பசுமை வீடு உள்பட ₹10.09 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிர்வாகிகள் சோமசுந்தரம், வாலாஜாபாத் கணேசன், பன்னீர்செல்வம், எழுச்சூர் ராமசந்திரன், சந்தவேலூர் பாலமுருகன், சார்லஸ், சரவணன், சிவசக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர், அமைச்சர் பெஞ்சமின் பேசுகையில், தமிழக அரசு, வருவாய் துறை சார்பில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறது. பொதுமக்களுக்கு அனைத்து துறைகளின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டங்கள் தொடர்ந்து கிடைக்கும் வகையில் அரசு செயல்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்பதால், குடிமராமத்து பணிகளை தமிழ்நாட்டிலேயே முதன்முதலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார். மேலும் தமிழகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் உள்ளது.பொதுமக்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு நேரடியாக அரசு அலுவலர்களை சந்தித்து, தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளில் உள்ள கிராமங்கள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் 26.08.209 முதல் 31.08.2019 வரை முதலமைச்சரின் சிறப்பு குறைத்தீர்வு திட்ட முகாம் நடத்தப்பட்டது.இம்முகாம்களின் மூலம் சுமார் 86 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, 65 சதவிகித மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களில் முதியோர் உதவித் தொகைக்கான உச்சவரம்பு நீடிக்கப்பட்டுள்ளதால், மனுக்களை பரிசீலனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

முன்னதாக, முதலமைச்சரின் சிறப்பு குறைத்தீர் திட்ட முகாமில், மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள், நலத்திட்ட உதவிகள் பெற வந்தனர்.  ஆனால்,  மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் திரண்ட ஆளுங்கட்சியினர், அங்குள்ள இருக்கைகளை பிடித்து கொண்டு, பயனாளிகளை வெளியே அனுப்பிவிட்டனர்.இதனால் பெண்கள், முதியோர் என ஏராளமானோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள்நல்லுறவு மைய கூட்ட அரங்கின் வெளியே கூட்டமாக உட்கார்ந்து கொண்டனர். சிலர் வயது முதிர்வு காரணத்தாலும், உடல்நிலை பாதிப்பாலும் தரையில் படுத்து கொண்டனர். இதனால், ஆளுங்கட்சியினரின் செயலை கண்டு பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.நிகழ்ச்சியில் சப் கெலக்டர் சரவணன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Governor ,gathering ,Chief Minister ,
× RELATED புதுச்சேரி நிர்வாகம் சீர்குலைய துணை...