×

சாலையில் கொட்டுவதை கண்டித்து குப்பை லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

செங்கல்பட்டு, நவ. 14:  செங்கல்பட்டில் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், குப்பை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்பட பல்வேறு கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள், நகராட்சி துப்புரவு ஊழியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, லாரிகளில் கொண்டு சென்று, பச்சையம்மன் கோயில் அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
மேற்கண்ட குப்பை கிடங்கில் குப்பைகளை தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு பயன்படுத்துவதில்லை. இதனால், அங்கு குப்பை, கழிவுகள் மலைபோல் குவிந்துள்ளன. இதையொட்டி அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மேலும், குப்பை கிடங்கில் குப்பைகள் நிறைந்துள்ளதால், உள்ளே கொட்டுவதற்கு இடமில்லாமல், லாரிகளில் கொண்டு வரப்படும் குப்பை, வெளிப்பகுதியில் சாலையோரத்தில் கொட்டப்படுகிறது. இதனால், மழை நேரத்தில், குப்பையில் மழைநீர் கலந்து, கழிவுநீராக மாறி சாலையில் முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.

இதையொட்டி அவ்வழியாக பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை, நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மேலும், இதன் அருகில் உள்ள அம்பேத்கர் நகர், பச்சையம்மன் கோயில், மும்மலை பகுதியில் வசிக்கும் மக்கள், பல்வேறு ெதாற்று நோய் பாதிப்பால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று காலை, குப்பை கிடங்கின் வெளியே, நகராட்சி குப்பை லாரிகளில் இருந்து குப்பை கொட்டப்பட்டது. இதை பார்த்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமையில், நகராட்சி குப்பை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அப்போது, குப்பை கிடங்களில் கொட்ட இடம் இல்லாததால், தற்போது கிடங்கின் வெளிபகுதி மற்றும் சாலையோரத்தில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு குப்பையை கொட்டி செல்கின்றனர். இதனால், கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. அதை மிதித்து கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதன் மூலம் பல்வேறு நோய் பரவும் அபாயம் உள்ளது.மேலும் நாய்கள், பன்றிகள் குப்பைகளை கிளறுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் அதை கண்டும் காணாமல் உள்ளனர் என ஆவேசமாக கூறினர்.

அதற்கு, நகராட்சி பொறியாளர் நித்யா, இனிவரும் காலங்களில் சாலையில் குப்பைகளை கொட்டாமல் நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டுவதற்கு, நகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி