×

அரசு தலைமை மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் கடும் சிரமம்

* வெளியே உணவு சாப்பிடும் அவலம்
* கண்டு கொள்ளாத சுகாதார துறை அதிகாரிகள்

காஞ்சிபுரம், நவ.14: காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பகுதி மற்றும் பிரசவ வார்டில், கர்ப்பிணிகளுக்கும், குழந்தை பிறந்தவர்களுக்கும் போதிய இடவசதி இல்லாத நிலை உள்ளது. இதனால், அவர்களுக்கு வெளி பகுதியில் உறவினர்கள், உணவு கொடுக்கின்றனர். இதனை சுகாதார துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர் என குற்றஞ்சாட்டப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயளிகளாக 600க்கு மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.இங்கு எலும்பு முறிவு, குழந்தைகள் பிரிவு, இருதயம், பிரசவ வார்டு உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையொட்டி, காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள தாமல், பாலுசெட்டிச்சத்திரம், முசரவாக்கம், கீழம்பி, செவிலிமேடு, வாலாஜாபாத், திருமுக்கூடல், மாகரல், ஆற்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் மட்டுமின்றி வேலூர் மாவட்டத்தின் பனப்பாக்கம், நெமிலி, திருவண்ணாமலை மாவட்டத்தின் தூசி, மாமண்டூர் ஆகிய  பகுதிகளை சேர்ந்த மக்களும் சிகிச்சை பெறுகின்றனர்.

மேலும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதிக தொழிற்சாலைகள் உள்ள மாவட்டமாகவும் காஞ்சிபுரம் திகழ்கிறது. அதனால் விபத்துகளில் சிக்கியவர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனையான இங்கு, போதிய வசதிகள் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. மருத்துவமனையில் உரிய பராமரிப்பில்லாமல் உள்ளதால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக நோயாளிகள் கூறுகின்றனர்.இந்நிலையில், காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கர்ப்பிணி பெண்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு வார்டில் போதிய வசதி இல்லை. அவருடன் இருக்கும் உறவினர்களுக்கும், வசதி ஏற்படுத்தவில்லை.இதனால், இங்கு குழந்தை பிரசவித்த பெண்களுக்கு, வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவை, வார்டில் சாப்பிட வசதி இல்லாததால், வெளியே மருத்துவமனை வளாகத்தில், திறந்த வெளியில் கொடுக்கின்றனர். ஏற்கனவே, பராமரிப்பு இல்லாமல் தொற்று நோய் பரவும் நிலையில் உள்ள இடத்தில், அவர்களுக்கு உணவு கொடுப்பதால், கர்ப்பிணிக்கு மட்டுமின்றி பிறந்த பச்சிளம் குழந்தைக்கும் நோய் பாதிப்பு ஏற்படும் அவல நிலை உள்ளது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதேபோல், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள், காத்திருப்பதற்கும், பைக் ஸ்டாண்டு போன்ற பகுதியை ஒதுக்கியுள்ளனர். அங்குள்ள கல் பதித்த இருக்கைகளில் அவர்கள் காத்திருந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியை பார்க்கின்றனர். அங்கும் போதிய இடவசதி இல்லாமல், நெருக்கடியில் தவிக்கின்றனர்.எனவே, பிரசவத்துக்கு வரும் வரும் கர்ப்பிணிகள், அவர்களுடன் வரும் உறவினர்கள் தங்குவதற்கு போதிய இடவசதி செய்ய வேண்டும். அவர்களுக்கு சுகாதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் வலியுறுத்துகின்றனர்.

Tags : hospitals ,women ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் அதிநவீன...