×

காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து அரசாணை வெளியீடு செங்கல்பட்டு தனி மாவட்டம் உதயம்

செங்கல்பட்டு, நவ. 14: காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து,  வருவாய் துறை ஆணையர் சத்தியகோபால் தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மனுக்கள், பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 3 மாதங்களாக செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்குவதிலும், இடம் தேர்வு செய்வதிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.பின்னர் புதிய மாவட்டத்தில் எந்தெந்த தாலுகா, கிராமங்கள் இணைப்பது என்பது பற்றி பரிசீலனை செய்தனர். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட தனி அலுவலர் ஜான்லூயிஸ் தலைமையில் விரிவாக பரிசீலனை செய்யப்பட்டு, அதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.அதில், செங்கல்பட்டு புதிய மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய 3 வருவாய் கோட்டங்களை ஏற்படுத்தி செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய 8 தாலுகாக்கள் இணைந்து செங்கல்பட்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், புதிதாக வண்டலூர் தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. வண்டலூர், மாம்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய குறுவட்டங்களை உள்ளடக்கி வண்டலூர் புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டம் தொடர்பான அரசாணை வெளியிட்டது, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

1997ல் செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது மீண்டும், செங்கல்பட்டு மாவட்டமாக மாற்றப்பட்டது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில், மாவட்டத்துக்கான புதிய கலெக்டர், எஸ்பி, மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.இதைதொடர்ந்து, தற்போதைய செங்கல்பட்டு சப் கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், செங்கல்பட்டு  மாவட்ட கலெக்டர் அலுவலகம் தற்போதைய சப் கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிகமாக செயல்படும். சப் கலெக்டர் அலுவலகம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள பேராசிரியர் குடியிருப்பு பகுதியிலும், செங்கல்பட்டு அரசு ஐடிஐ வளாகத்தில் எஸ்பி அலுவலகம், ஊராட்சி திட்ட அலுவலர் அலுவலகமும் தற்காலிகமாக செயல்படும்.

செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்தின் தரை தளத்திலும், 2வது தளத்திலும் மற்ற துறை மாவட்ட அலுவலகங்கள் செயல்படும். மற்ற அலுவலகங்களுக்காக பல தனியார் கட்டிடங்களும் வாடகைக்கு எடுக்கப்பட உள்ளன. அரசாணை மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம் எஸ்பி அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கினால் கட்டிடப் பணி தொடங்கப்படும். மாவட்ட அலுவலர்கள் அதற்கான பணியாளர்கள் இன்னும் நியமிக்கவில்லை. அதற்கான அரசாணை வெளியானவுடன் பணி நியமனம் செய்யப்படுவார்கள். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என 2 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, மாவட்ட அளவிலான பணி மாறுதலும் நடந்து முடிந்துவிட்டது என்றனர்.நகராட்சிகள் : செங்கல்பட்டு, தாம்பரம், மறைமலைநகர், பம்மல், அனகாபுத்தூர், பல்லாவரம், மதுராந்தகம், செம்பாக்கம்,பேரூராட்சிகள்: திருக்கழுக்குன்றம், இடைக்கழிநாடு, கருங்குழி, கூடுவாஞ்சேரி, அச்சரப்பாக்கம், மாமல்லபுரம், திருப்போரூர், சிட்லபாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, திருநீர்மலை.ஒன்றியங்கள்: செயின்ட் தாமஸ் மலை, காட்டாங்கொளத்தூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், லத்தூர், மதுராந்தகம்.தாலுகாக்கள்: செங்கல்பட்டு, வண்டலூர், தாம்பரம், பல்லாரவரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர்.

Tags : Chengalpattu ,Kanchipuram ,state ,
× RELATED செங்கல்பட்டில் பைக் திருடன் அதிரடி கைது