131வது பிறந்தநாளை முன்னிட்டு நேரு உருவ படத்திற்கு அரசு சார்பில் மரியாதை: கவர்னர், அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: நேருவின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அவரது உருவப் படத்திற்கு கவர்னர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  ஜவஹர்லால் நேரு  பிறந்த தினமான நவம்பர் 14ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான நேரு உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் மோதிலால் நேரு - சுவரூப ராணி அம்மையார் தம்பதியருக்கு 1889ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி மகனாகப் பிறந்தார். 1947ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் நாள் இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்று, 1947ம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரை இந்தியாவை வழிநடத்தியவர். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும், நவீன இந்தியாவின் சிற்பி எனவும் அழைக்கப்பட்டார்.

வாழ்நாள் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளையவர்களின் நலம், கல்வி மற்றும் வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபட்டதை நினைவுபடுத்தும் வகையில் இந்தியா முழுவதும் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய குழந்தைகளால் “நேரு மாமா” என்று அன்புடன் அழைக்கப்பட்ட நேரு 1964ம் ஆண்டு மே மாதம் 27ம் நாள் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.நேருவின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை, கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் உள்ள உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட உள்ள உருவப் படத்திற்கு இன்று காலை 10 மணியளவில் ஆளுநர்,  அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத்தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.

Related Stories:

>