×

நிலஅபகரிப்பு வழக்கில் சிக்கிய பிரபல தொழிலதிபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது

சேலம், நவ.13:  சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் சண்முகம்(66). இவரது தம்பி மணி(63). பிரபல தொழிலதிபர்களான இவர்கள் கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது நில அபகரிப்பு புகார்கள் தொடர்ந்து வந்தது. சங்ககிரி போலீஸ் ஸ்டேசனில் 2 வழக்கும், மாவட்ட மத்திய குற்றப்பிரிவில் 2 வழக்கும், சிபிசிஐடியில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சங்ககிரியை சேர்ந்த செல்வஅரசு(46) என்பவர், சங்ககிரி போலீசில் தொழிலதிபர் சண்முகம், மணி ஆகியோர் மீது புகார் செய்திருந்தார். அதில், கடந்த 1997ம் ஆண்டு கொங்கணாபுரம் ரோட்டில் உள்ள 1 ஏக்கர் நிலத்தை வைத்து ₹6.50 லட்சம் கடன் வாங்கினேன். பிறகு  அதே பகுதியில் உள்ள 25 சென்ட் நிலத்தை வைத்து ₹3 லட்சம் பெற்றேன். இதற்கான தொகையை வட்டியுடன் செலுத்திவிட்டேன். ஆனால் அவர்கள் நிலத்திற்கான பத்திரத்தை திரும்ப தராமல்,

கொடுத்த பணம் அனைத்தும் வட்டிக்கே சரியாகி விட்டது என்று கூறி ஏமாற்றிவிட்டனர். அவர்களிடம் இருந்து ₹1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டு தரவேண்டும்’ என கூறியிருந்தார். இதுதொடர்பாக அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்த சங்ககிரி போலீசார், ஏற்கனவே சிறையில் இருக்கும் இருவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருப்பதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. தீபா கனிக்கர், கலெக்டர் ராமனுக்கு பரிந்துரை செய்தார். இதனை பரிசீலித்த கலெக்டர், அண்ணன் தம்பிகளான சண்முகம், மணி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி சேலம் மத்திய சிறையில் இருக்கும் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

Tags : celebrity businessmen ,
× RELATED மேட்டூர் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு