×

பாசி படலத்தால் துர்நாற்றம்: பண்ணவாடி நீர்த்தேக்கப்பகுதியில் நுண்ணுயிர் கலவை தெளிப்பு

மேட்டூர், நவ.13:மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியான பண்ணவாடி, செட்டிப்பட்டி, கோட்டையூர் மற்றும் காவேரிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நீர் மாசடைந்து நிறம் மாறி துர்நாற்றம் வீசியது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். இதையடுத்து, துர்நாற்றத்திற்கான காரணமான பாசிகளை கட்டுப்படுத்தும் வகையில் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 7ம் தேதி முதல் திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் கலவை தெளிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை கலெக்டர் ராமன் நேற்று பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. இதனால், பண்ணவாடி போன்ற நீர்த்தேக்கப் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பாசி படர்ந்து காணப்படுகிறது. இதன்மூலம் ஒருவிதமான துர்நாற்றம் பரவியது.

இதுகுறித்த தகவலின்பேரில், தமிழக முதல்வர் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட துறையினரை அழைத்து ஆலோசனை நடத்தினோம். அதன் அடிப்படையில் எபெக்டிவே மைக்ரோ ஆர்கானிக் கலவையை நீர்த்தேக்கப் பகுதிகளில் தெளித்து பாசிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியானது 15 நாட்கள் நடைபெறும். இதுவரை பண்ணவாடி நீர்த்தேக்கப் பகுதியில் 1,200 லிட்டர் எபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிக் தெளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கலெக்டர் ராமன் தெரிவித்தார்.  அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், சந்திரசேகரன் எம்.பி., செம்மலை எம்எல்ஏ, கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்லதுரை(வேளாண்மை) மற்றும் மீன் வளத்துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : farmland reservoir ,
× RELATED 24 மையங்களில் நீட் தேர்வு நடத்த ஏற்பாடு