×

ஏக்கல்நத்தம் மலை கிராமத்தில் ₹2.50 கோடியில் புதிய தார்சாலை

கிருஷ்ணகிரி, நவ.13: ஏக்கல்நத்தம் மலை கிராமத்திற்கு சாலை அமைக்க ₹2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி ஒன்றியம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாரலப்பள்ளி ஊராட்சியில் உள்ள மலை கிராமம் ஏக்கல்நத்தம். இக்கிராமத்தில் 800 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் 25 சதவீதத்தினர் தாழ்த்தப்பட்ட மற்றும் இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இப்பகுதி மக்கள், தங்களது ஊரில் இருந்து பிற இடங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி, கல்வி வசதி ஆகியவற்றை பெற சுமார் 4.6 கி.மீ நடந்து சென்று, பின்னர் தான் பஸ்சில் செல்ல வேண்டிய நிலை இருந்தது. மழை காலத்தில் வனப்பகுதி வழியாக நடந்து செல்வதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இந்த கிராமத்தில் வாழும் மக்கள், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தையும், கால்நடைகளையும் நம்பி உள்ளதால், அவர்களின் நிலத்தில் விளையும் விளைபொருட்களை சந்தை படுத்துவதில், சாலை இல்லாததால் மிகவும் நஷ்டப்படுவதாகவும், இந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கு கூட ஆசிரியர்கள் வர சிரமப்படுகின்றனர். எனவே, மலை கிராமத்துக்கு சாலை வசதி கோட்டு, கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும், சாலை வசதி கேட்டு தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தினர். இந்நிலையில் கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று வேப்பனஹள்ளி தொகுதி திமுக எம்எல்ஏ முருகன், சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்து பேசினார். இதையடுத்து தற்போது மலை கிராமத்துக்கு சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இது குறித்து கலெக்டர் பிரபாகர் கூறுகையில், ஏக்கல்நத்தம் மலை கிராமத்திற்கு செல்ல பெரியசக்கனாவூரில் இருந்து ஏக்கல்நத்தம் வரை 4.6 கி.மீ வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், வனத்துறை மூலம் சாலை அமைக்க 2018-19ம் ஆண்டிற்கான சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம் மூலம் ₹2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கப்படும். இதன் மூலம் இப்பகுதி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது என்றார்.

Tags : hill village ,
× RELATED சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்