×

அனுமதியின்றி கட்டிய கோயில் பீடம் இடித்து அகற்றம்

கம்பம், நவ.13: கம்பம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அனுமதியின்றி கட்டிய முனீஸ்வரன் கோவில் பீடம் அதிகரிகள் உத்தரவின்பேரில் அகற்றப்பட்டது. கம்பம் கூடலூர் நெடுஞ்சாலையில் கம்பம் பத்திரப்பதிவு அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்புறம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பழமையான ஆலமரத்தின் கீழ் பலஆண்டுகளாக சிறிய முனீஸ்வரன் கோவில் இருந்தது. இக்கோவிலில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இப்பகுதி பெண்கள் வந்து வழிபட்டு செல்வதும், கம்பம் கவுமாரியம்மன் கோவில் திருவிழா காலங்களில் அக்னிச்சட்டி எடுத்துச் செல்பவர்கள் இந்த ஈஸ்வரன் கோவிலில் வழிபட்டு தேங்காய் உடைத்துச் செல்வதும் வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் இக்கோவிலை ஒட்டி சிறிய பீடம் ஒன்று கட்டினர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பீடம் கட்டுவதாக கம்பம் தெற்கு போலீசாருக்கு புகார் சென்றது. போலீசார் கம்பம் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். நகராட்சி கட்டிட ஆய்வாளர் தங்கராஜ், ஆர்ஐ நாகராஜ் உட்பட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. புதிதாக கட்டிய பீடத்தை மட்டும் இடிக்க முடிவு செய்து பின் அந்த பீடம் மட்டும் அகற்றப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு
ஏற்பட்டது.

Tags : Demolition ,temple shrine ,
× RELATED பாதுகாப்புக்குழு கூட்டத்தில்...