×

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சோதனைச்சாவடி அமைக்க வேண்டும்

கம்பம், நவ.13: தமிழக பகுதியிலிருந்து கேரளாவுக்கு விலையில்லா ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு தமிழக எல்லைப்பகுதிகளில் மீண்டும் வருவாய்த்துறை சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு நியாய விலைக் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு மாதந்தோறும் இலவசமாக அரிசி வழங்குகிறது. தேனி மாவட்டத்தில், கூடலூர், கம்பம், பாளையம், கோம்பை, சின்னமனூரைச் சேர்ந்த சில வியாபாரிகள், ரேஷன்  அரிசியை மொத்தமாக வாங்கி கம்பம்மெட்டு, குமுளி வழியாக பைக்கிலும், வாகனங்களிலும் கேரளாவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர். இந்த அரிசி கடத்தலை தடுக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழக எல்லையை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய கம்பம்மெட்டு, குமுளி பகுதிகளில் வருவாய்துறை சோதனைச்சாவடி அமைத்தது. ஒரு கிராம நிர்வாக அதிகாரி தலைமையில் இரு தலையாரிகள் என மூன்று பேர் போலீசாருடன் இணைந்து சோதனைச்சாவடிகளில் பணியிலிருந்தனர்.

ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் வழக்கமான பணிகள் தடைபடுவதாகக் கூறி சோதனைச்சாவடிக்கு பணிக்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். இதைத்தொடர்ந்து தலையாரிகளும் சோதனைச்சாவடிக்கு பணிக்கு வருவதை படிப்படியாக நிறுத்திக்கொண்டனர். இதனால் வருவாய்துறை சோதனைச்சாவடி அமைத்ததன் நோக்கம் நிறைவேறவில்லை. அரிசி கடத்தலைத் தடுக்க உணவு கடத்தல் தடுப்புத்துறை போலீசாரும், பறக்கும்படை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டாலும், முழுமையாக அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை. இதனால் அரிசி கடத்தலை தடுக்க கம்பம்மெட்டு, குமுளி தமிழக எல்லைப்பகுதிகளில் மீண்டும் வருவாய்துறை சோதனைச்சாவடி அமைக்கவேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அரிசி கடத்தலை தடுக்க வேண்டுமானால், எல்லைப்பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தவேண்டும். ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பிறகு குமுளி, கம்பம்மெட்டு பகுதியில் இயங்கி வந்த வணிகவரித்துறை சோதனைச் சாவடிகள் பூட்டப்பட்டு ஆளின்றி கிடக்கின்றன. புதிதாக சோதனைச்சாவடி அமைப்பதற்குப்பதிலாக இந்த கட்டிடங்களிலேயே மீண்டும் வருவாய்துறை சோதனைச்சாவடி அமைத்து அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தால் அரிசி கடத்தலை முழுமையாக தடுக்கலாம்.  எனவே அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Tags : checkpoint ,
× RELATED தருமபுரி அருகே தொப்பூர் சோதனை சாவடியில் 16 கிலோ தங்கம் பறிமுதல்..!!