×

மூணாறில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகள்

மூணாறு, நவ.13: மூணாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா விடுதிகளை மையமாக வைத்து அரங்கேறும் கொலைகளால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர்.  தென்னகத்து காஷ்மீர் என்று அறியப்படும் மூணாறில் இயற்கையை ரசிக்கவும் இதமான சூழலை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக மூணாறு, ஆனாசால், சின்னக்கானல், ராஜாக்காடு, சாந்தன்பாறை போன்ற பகுதிகளில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுற்றுலா விடுதிகளை மையமாக வைத்து பல்வேறு கொலைகள், கஞ்சா போன்ற போதை பொருட்கள் பரிமாற்றங்கள் அரங்கேறி வருவது சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மேலும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தலைவலியாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி மூணாறில் நடையார் சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு உடுமலை பகுதியை சேர்ந்த அழகு மீனா காதலனால் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். அடுத்ததாக கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த ஜேக்கப் வர்கீஸ்(44) என்பவருக்கு மூணாறு சின்னக்கானல் நடுப்பாறை பகுதியில் சொகுசு விடுதி உள்ளது. இங்கு ஜேக்கப் வர்கீஸும் சின்னக்கானல் பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்த முத்தையா (55) என்பவரும் கடந்த ஜனவரியில்  கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இடுக்கி மாவட்டம் கரிமலை பகுதியே சேர்ந்த சனிஷ் என்பவர் சுற்றுலா விடுதியின் மதில் சுவரில் இடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொலைகளுக்கு எல்லாம் உச்சக்கட்டமாக சாந்தன்பாறை புட்டடி என்ற இடத்தில் மனைவியின் கள்ளக்காதலை கண்டித்த ரிஜோஷ் (37) என்பவர் கழுத்தை நெரித்து கொலை செய்து எரித்து புதைக்கப்பட்டார்.   

இவ்வாறு சுற்றுலா விடுதிகளை மையமாக வைத்து மூணாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்   நடைபெறும் கொலை பட்டியல்கள் நீண்டு கொண்டு வருகிறது. இது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. கொலைகள் ஒருபுறம் அரங்கேற கஞ்சா விற்பனையும் சுற்றுலா விடுதிகளில் களைகட்ட துவங்கியுள்ளது. கம்பம் பகுதிகளில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா சுற்றுலா விடுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு மகனை  1 கிலோ கஞ்சாவுடன் கள்ளிமலை போலீசார் கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் மூணாறில் உள்ள விடுதிகளுக்கு விற்பனை செய்ய கொண்டுவந்ததாக கூறினார்.இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை மட்டும் இடுக்கி மாவட்டத்தில் 100க்கும் அதிகமான கஞ்சா கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார். மூணாறில் தொடர்கதையாக மாறிவரும் கொலைகள், போதை விற்பனை காவல்துறை அதிகாரிகளுக்கு தலைவலியாக மாறி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : killings ,Munnar ,
× RELATED தொழிலாளர் குடியிருப்புகளை சீரமைக்க...