×

மழைக்காலம் முடிந்த பின்னரும் குடிமராமத்து செய்ய வேண்டும்

சிவகங்கை, நவ.13:  சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் குடிமராமத்து பணிகளை மழைக்காலம் முடிந்த பின்னரும் தொடர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்து பணியில் பராமரிப்பு செய்ய பெரியாறு கால்வாய்களான சீல்டு கால்வாய்க்கு ரூ.1.47 கோடி, 48 கால்வாய்க்கு ரூ.3 கோடி, லெஸ்சிஸ் கால்வாய்க்கு ரூ.65 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல் மாவட்டம் முழுவதும் 109 கண்மாய்களை குடிமராமத்து பணிகள் மூலம் சீர் செய்ய ரூ.39.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இந்த இரண்டு பணிகளும் பொதுப்பணித் துறையின் கீழ் செய்யப்படுகின்றன. ஊரக வளர்ச்சித் துறை சார்பில் குடிமராமத்து பணி திட்டத்தில், ரூ.35 கோடி மதிப்பீட்டில் 300 குளங்கள், ஊரணிகள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. குடிமராமத்து பணிகள், விவசாயிகள் நீர்ப்பாசன சங்கம் அமைத்து அதன் மூலம் செய்யப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் ஆளும் கட்சியினர் தலையீட்டில் போலி விவசாய சங்கங்கள் அமைக்கப்பட்டன.
 
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செய்யப்படும் குடிமராமத்து பணி ஏராளமான ஊர்களில் ஊராட்சி செயலர் பெயரில் நடக்கிறது. இதில் ஒரு பணிக்கு நான்கில் ஒரு பங்கை ஆளும் கட்சியினர், அதிகாரிகள் கமிசனாக பெற்றுக்கொண்டு யாரை வேண்டு மானாலும் பணி செய்ய அனுமதிக்கின்றனர். இதனால் விவசாய சங்கங்கள், விவசாயிகள் மேற்பார்வையில் இல்லாமல் பெரும்பாலும் காண்ட்ராக்டர்களே பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் மற்றும் இம்மாத தொடக்கம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கண்மாய், குளங்களில் நீர் உள்ளது. கண்மாய், குளங்களுக்குள் நீர் இருக்கும் நிலையில் நீர் உள்ள பகுதியை விடுத்து பிற பகுதிகளில் கண்துடைப்பிற்கு குடிமராமத்து பணி நடக்கிறது. இதுபோல் மழைக்காலம் என்பதால் கண்மாய் கரைகள், நீர்ப்பிடிப்பு பகுதி அனைத்துமே சேரும், சகதியுமாக உள்ளது. இதுபோன்ற நேரத்தில் பணி செய்வதால் எவ்வித நன்மையும் இல்லை. எனவே மழை காலம் முடிந்ததும் எஞ்சிய பணிகளை தொடர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:குடிமராமத்து பணிகள் என்பதே விவசாயிகள் பங்களிப்போடு இருக்க வேண்டும் என்பதால் விவசாயிகளே சங்கம் அமைக்க வேண்டும். அதன் மூலம் பணிகள் செய்ய வேண்டும் என அரசு விதிமுறை உள்ளது. ஆனால் மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்தமாக ரூ.80 கோடியிலான திட்டம் என்பதால் இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன.  இருப்பினும் ஏதேனும் பணிகள் நடந்தால் சரி என இருந்தோம். ஆனால் மழை காலத்தில், கண்மாய்களில் நீர் உள்ள நேரத்தில் பணிகள் செய்வது என்பது வீண். எனவே மழைக்காலம் முடிவடைந்த பிறகு இப்பணிகளை தொடர வேண்டும். பணிகளுக்கான பில் பணத்தை வழங்கக் கூடாது. மழைக்காலம் முடிந்ததும் மீண்டும் பணிகள் செய்து அதன் பிறகே பணத்தை வழங்க வேண்டும் என்றனர். 

Tags : season ,
× RELATED 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள்...