×

திருவண்ணாமலை குப்பை கிடங்கு அருகே கண் துடைப்புக்காக நடந்த குப்பைக்கழிவுகள் அகற்றும் பணி

திருவண்ணாமலை, நவ.13: திருவண்ணாமலையில் குப்பை கிடங்கு அருகே சாலையோரம் இருந்த குப்பைக்கழிவுகள் அகற்றும் பணி, வெறும் கண் துடைப்பிற்காக நடந்துள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை நகராட்சி குப்பை கிடங்கு பின்புறம் வழியாக வேலூர் சாலை மற்றும் அவலூர்பேட்டை சாலைக்கு இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது. மேலும், பவுர்ணமி நாட்கள் மற்றும் தீபத்திருவிழாவின்போது, ஈசான்ய மைதானத்தில் அமைக்கப்படும் தற்காலிக பஸ் நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது. இந்த சாலை கடந்த சில மாதங்களாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும், இந்த சாலையின் ஓரங்களில் இறைச்சி கழிவுகள், குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில்  நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து, ேநற்று முன்தினம் நகராட்சி நிர்வாகத்தினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த குப்பைகளை அகற்றி அருகில் உள்ள காலியான இடத்தில் குவித்து வைத்தனர். குப்பை கழிவுகளை முழுமையாக அகற்றாமல் காலி இடத்தில் மலைபோல் குவித்து வைத்ததால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இந்த குப்பை கிடங்கிற்கு அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த சாலையோரம் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். மீண்டும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தோம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நகராட்சி நிர்வாகத்தினர் குப்பை கழிவுகளை சாலையோரத்தில் இருந்து அப்புறப்படுத்தி, சிறிது தூரம் தள்ளி காலியாக உள்ள இடத்தில் மீண்டும் குவித்து வைத்துள்ளனர். இந்த வேலை வெறும் கண் துடைப்புக்காக மட்டுமே நடந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் உள்ள காலி இடத்தில் குவித்து வைத்துள்ள குப்பை கழிவுகளை முழுமையாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Removal ,garbage warehouse ,Thiruvannamalai ,
× RELATED சென்னை பரங்கிமலை கன்டோன்மென்ட்...