×

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 இடங்களில் ரூ1.75 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட பால் குளிர்விப்பு நிலையம்

திருவண்ணாமலை, நவ.13: திருவண்ணாமலை மாவட்டத்தில், ரூ1.75 கோடி மதிப்பில் 12 இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு நிலையங்களை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில், புதிய பால் குளிர்விப்பு நிலையங்கள் திறப்பு விழா, பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா, நவீன ஆவின் பாலகம் அடிக்கல் நாட்டு விழா ஆகியவை திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பெருந்தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். பால் உற்பத்தியில் பொருளாதார வளர்ச்சி எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

விழாவில், மெய்யூர், ராதாபுரம், நூக்காம்பாடி, வீரணம், பேராயம்பட்டு, இளையாங்கன்னி, கல்லனைகரிப்பூர், சின்னபுஷ்பகிரி, ஆதனூர், ஆனைபோகி, கடம்பை, சி.எம்.புதூர் ஆகிய இடங்களில், 56 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, ₹1.75 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு நிலையங்களை, தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்து பேசியதாவது: பால் உற்பத்தியில் தமிழகம் தேசிய அளவில் 8வது இடத்தில் இருக்கிறது. பால் உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தியாளர்களின் நலன்களை பாதுகாக்கவும் தமிழக அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. எனவேதான், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் முன்னோடியாக இருக்கிறது. நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் லிட்டர் பால் இந்த மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது. அம்மாபாளையத்தில் உள்ள பால் பவுடர் தொழிற்சாலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தற்போது, 12 இடங்களில் தொகுப்பு பால் குளிர்விப்பு நிலையங்களை திறந்திருக்கிறோம்.

இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், பால் வளத்துறை சிறப்பாக செயல்படவும் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயலாற்றுவது பாராட்டுக்குரியது. பால் உற்பத்தியை அதிகரிக்க தெரிவிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும், முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 450 பால் உற்பத்தியாளர்களுக்கு ₹1.88 லட்சம் ஊக்கத்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார். முன்னதாக, திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில், ₹45 லட்சம் மதிப்பில் நவீன பாலகம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டினார். விழாவில், எம்எல்ஏக்கள் கீழ்பென்னாத்தூர் கு.பிச்சாண்டி, செய்யாறு தூசி கே.மோகன், திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர் வி.எம்.உலகநாதன், துணை பதிவாளர்(பால்வளம்) என்.ராமச்சந்திரன், துணைத் தலைவர் பாரி பி.பாபு மற்றும் நிர்வாகக் குழு இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை தீபத்திருவிழா ஆவின் மூலம் 3,500 கிலோ நெய்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் 10ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றுவதற்காக, 3,500 கிலோ, முதல் தர தூய நெய் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்(ஆவின்) சார்பில், இந்த ஆண்டு மகா தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ அக்மார்க் தூய நெய், அண்ணாமலையார் கோயிலுக்கு வழங்கப்படுகிறது. அதையொட்டி, மகா தீபத்துக்கான நெய் வழங்கும் கடிதத்தை ஆவின் சார்பில், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையரிடம் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சேவூர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பெருந்தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழங்கினர்.

Tags : milk refrigeration plant ,Thiruvannamalai district ,locations ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...